தீப ஒளியில் ஜொலித்தது கோவை!
கோவை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், இனிப்புகளை பரிமாறியும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். இன்று (நவ.,8) அதிகாலை எழுந்து எண்ணெய் குளியல் போட்டு, புத்தாடை அணிந்தனர். இனிப்பு, பலகாரங்களை இஷ்ட தெய்வங்களுக்கு படைத்து வழிபட்டனர். அருகில் வசிப்போருடன் இனிப்பு, பலகாரங்களை பரிமாறி மகிழ்ந்தனர். கோவில்களுக்கு சென்று வழிபட்டனர் பலர். சிலர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று முதியவர்களுக்கு உணவு பரிமாறி பண்டிகையை கொண்டாடினர். இளம் தலைமுறையினர் தியேட்டர், மால், ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் போன்ற இடங்களில் பொழுதை கழித்தனர். புத்தாடையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலையில் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பண்டிகையை முன்னிட்டு வடகோவை, பார்க்கேட், காந்திபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பார்க், ரவுண்டானாக்கள் மின்னொளி அலங்காரத்தால் ஜொலித்தன.