ஆட்டுக்குட்டியை கடித்த மர்மவிலங்கு
கோவை : கோவை, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட நவக்கரை, மாவுத்தம்பதியில், தோட்டத்தில் இருந்த ஆட்டுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.நவக்கரை பிரிவு, மாவுத்தம்பதி கிராமத்தில், கவுதம் என்பவரது தோட்டத்தில், ஆடு மற்றும் இரண்டு ஆட்டுக்குட்டியை மர்மவிலங்கு கடித்தது. இதில், ஆட்டுக்குட்டி பலியானது. கடித்தது சிறுத்தையாக இருக்கலாம் என தகவல் பரவியது.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். வந்தது என்ன விலங்கு என உறுதியாகத் தெரியவில்லை. எனவே, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்பேரில், அங்கு தானியங்கி கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.