சாய்ந்த மின்கம்பம் சீரமைச்சாச்சு தினமலர் செய்தி எதிரொலி
உடுமலை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பழையூர் கிராமத்தில், சாய்ந்திருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பழையூர். கிராமத்தில் இருந்து புதுார் செல்லும் இணைப்பு ரோட்டில் உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது.இந்த ரோட்டையொட்டி தெருவிளக்கு வசதிக்காக வரிசையாக மின்கம்பங்கள் அமைந்துள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பங்கள் சாயத்துவங்கின.குறிப்பாக, அங்குள்ள பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிந்த மின்கம்பம் அடியோடு சாய்ந்து விட்டது; மின்கம்பம் சாய்ந்து பல நாட்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.இந்த அவலத்தால், தெருவிளக்குகள் எரியாமல், பழையூர் கிராம மக்கள் பாதிக்கப்படுவது குறித்து, கடந்த 8ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மின்வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாய்ந்திருந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது.அப்பகுதியிலுள்ள அனைத்து தெருவிளக்கு களையும் சீரமைத்து, இரவு நேரங்களில், அச்சமின்றி அப்பகுதியில் செல்ல குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழையூர் கிராம மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.