ஆங்கிலம் கற்பிக்க துவக்கிய திட்டம்; சுற்றறிக்கையாகவே இன்னமும் இருக்கு
கோவை; தேசிய அளவிலான நாஸ், ஏசிஇஆர் போன்ற கற்றல் அடைவு ஆய்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், அவர்கள் கற்கும் வகுப்புக்கேற்ற மொழித் திறனைப் பெறவில்லை என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட 'லெவல் அப்' திட்டம் துவக்கப்பட்டது. ஜூன் முதல் டிச., வரை மாணவர்கள் அடைய வேண் டிய குறைந்தபட்ச மொழித்திறன் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, வழிமுறைகளுடன் செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்காக, மாவட்டந்தோறும் 'வாட்ஸ்அப்' குழுக்கள் உருவாக்கப்பட்டு, கற்பித்தல் அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், https://sites.google.com/view/tnlevelup/home என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டதே தவிர, கோவை பள்ளிகளில் செயல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமையாசிரியர்களில் சிலர் கூறுகையில், 'மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்துக்காக, ஆசிரியர்கள் ஏற்கனவே பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். வாசிப்பு, உரையாடல், எழுதுதல் ஆகியவற்றில் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது' என்றனர்,