மாநகராட்சியில் சொத்து வரி ஆறு சதவீதம் உயர்த்துவதா! கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு; ஆளுங்கட்சியினர் கடுப்பு
கோவை: கோவை மாநகராட்சியில் அமலுக்கு வந்துள்ள, சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., மட்டுமின்றி, மா.கம்யூ., - இ.கம்யூ., - காங்., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். வாபஸ்: மா.கம்யூ.,
சபை நடவடிக்கை துவங்கியதும், மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி, ''2022ல் சொத்து வரி, 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. அப்போது, அறியாமை காரணமாக அனுமதித்து விட்டனர். ஆண்டுதோறும், 6 சதவீத வரி உயர்வு என்பது, ஏற்றுக் கொள்ள முடியாது. அதை வாபஸ் பெற வேண்டும். இக்கூட்டத்திலேயே மேயர், கமிஷனர் அறிவிக்க வேண்டும்,'' என்றார். அபராதம் தவறு: அ.தி.மு.க.,
அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது, ''ஏப்., மாதத்திலேயே, 6 சதவீத வரி உயர்வு அமலுக்கு வந்திருக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்காக நிறுத்தி வைத்து விட்டு, இப்போது அமல்படுத்துகிறீர்கள். ஒரு சதவீதம் அபராதம் விதிப்பது தவறு,'' என்றார். கண்டிக்கிறோம்: காங்கிரஸ்
காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபாலன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது; வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார். அரசுக்கு கெட்ட பெயர்: ம.தி.மு.க.,
ம.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி பேசும்போது, ''சொத்து வரியை உயர்த்தியதால், தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.இதே கருத்தை தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தியதோடு, இருக்கையில் இருந்து எழுந்து நின்றபடி இருந்தனர். இதனால் மன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. அவர்களை மேயர், இருக்கையில் அமரச் சொன்னார். சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உடனடியாக அறிவிக்க வேண்டுமென, கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதனால், பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதிகாரமில்லை: மேயர்
மேயர் பதிலளிக்கையில், '2022ல் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றிய போதே, ஆண்டுதோறும், 6 சதவீதம் உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மக்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருக்கிறது. அரசின் உத்தரவை நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ நமக்கு அதிகாரம் இல்லை. பாதிப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.இருப்பினும், கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பலர் நின்று கொண்டே இருந்தனர். இதற்கு கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி ஆட்சேபனை தெரிவித்து பேசுகையில், ''மேயர் பதிலளித்து விட்டார். தேவையின்றி பேசிக் கொண்டே இருக்கக் கூடாது,'' என்றார்.ஆனால், மா.கம்யூ., மற்றும் இ.கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதற்காக புறப்பட்டனர். அவர்களை, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்டோர் தடுத்து, சமரசம் செய்து இருக்கையில் அமர வைத்தனர்.'ஆல் - பாஸ்' முறையில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, ஒரு மணி நேரத்துக்குள் மாமன்ற கூட்டத்தை முடிக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் ஆலோசித்திருந்தனர். கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கிளப்பிய பிரச்னையால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வந்த அ.தி.மு.க.,வினர்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர், துண்டுகளை முக்காடு போல் தலை மீது போட்டுக் கொண்டு, மன்ற கூட்டத்துக்கு வந்தனர்.பிரபாகரன் கூறுகையில், ''தினம் தினம் வரி உயர்வு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 3,500 சதுரடிக்கு மேல் கட்டடம் கட்டினால், சதுரடிக்கு 40 ரூபாய் கட்டணம் இருந்தது; 88 ரூபாயாக உயர்த்தி, கடந்த மாமன்ற கூட்டத்தில் வந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, 88 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மக்கள் மீது அக்கறையின்றி செயல்படுகின்றனர். நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, கோவையில் நடக்கும் முறைகேடுகளை தட்டிக்கேட்க வேண்டும்,'' என்றார்.