ரூ.20 லட்சம் செலவில் குட்டைகள் துார் வாரப்பட்டன
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே, 20 லட்சம் ரூபாய் செலவில், குட்டைகள், தடுப்பணைகளில் துார் வாரப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீரை அதிகரிக்க குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளை துார் வார வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக வேளாண் பொறியியல் துறை, குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளை துார் எடுக்க முடிவு செய்துள்ளது. வேளாண் பொறியியல் துறை, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிறுமுகை அருகே உள்ள, பெத்திக்குட்டை, இரும்பறை, தேரங்கிணறு, நீலங்கிணறு, தேசியூர் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து குட்டைகளில் துார் வாரப்பட்டு உள்ளது. அதோடு தண்ணீர் செல்லும் ஓடைகளில் கட்டியுள்ள, 15 தடுப்பணைகளிலும் துார் வாரப்பட்டுள்ளன. இது குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெத்திக்குட்டையில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள குட்டை, 20 அடி ஆழத்திற்கு துார் வாரப்பட்டு உள்ளது. குட்டைகள், தடுப்பணைகளை ஆழப்படுத்தும் பொழுது, மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர், அதிக அளவில் தேங்கி நிற்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய கிணறுகளுக்கு தொடர்ந்து நீரூற்று கிடைக்கும். இதற்காக குட்டைகள், தடுப்பணைகளில் துார் வாரப்பட்டு உள்ளன. மருதூர், வெள்ளியங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள, குட்டைகள், தடுப்பணைகளை துார் வார தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.