உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினம், தினம் தொங்கல் பயணம் பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்

தினம், தினம் தொங்கல் பயணம் பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்

சென்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், வளர்ந்த நகராக உள்ளது கோவை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.பஸ் போன்ற பொது போக்குவரத்தையே, இம்மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள, 17 பஸ் டிப்போக்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.தவிர, ஏராளமான தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இருந்தபோதும் காலை, மாலை போன்ற 'பீக்' நேரங்களில், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதும், கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் நடக்கிறது.பல அரசு டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் பஸ்களில் இந்த வசதி இல்லாததால், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதே, விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.பெற்றோர் தரப்பிலும், கல்வி நிறுவனங்கள் தரப்பிலும், இந்த ஆபத்தான படிக்கட்டு பயணம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அதேசமயம், அதிவேகமாகவும், அலட்சியமுடனும் பஸ்களை இயக்கும் ஒருசில ஓட்டுனர்கள் மீதும் போலீசார், போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அரசு பஸ் தேவை

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்வோரும், திரும்புவோரும் அதிகம் என்பது, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அதிக பஸ் தேவைப்படும் இந்த மார்க்கங்களில், 'பீக் அவர்'சில் அரசு அதிக பஸ்களை இயக்க வேண்டும். ஆனால் நெருக்கடி மிகுந்த இந்த நேரங்களில், முக்கிய ரூட்டுகளில் தனியார் பஸ்களையே அதிகம் காண முடிகிறது.அவர்களும் அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பஸ் நிறைய பயணிகளை அடைத்துச் செல்வது தான், இந்த தொங்கல் பயணங்களும், விபத்துக்களும் ஏற்பட காரணம். வேண்டுமென்றே இந்த ரூட்டுகளில், கூடுதல் தனியார் பஸ்களுக்கு பெர்மிட் அளிக்கப்படுகிறதோ, இதில் லஞ்சம் விளையாடுகிறதோ என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. தனியார் பஸ்கள் பயணிகளை புட்போர்டு வரை நிரப்பி, அள்ளிச்சென்ற பிறகு, அரசு பஸ்கள் சாவகாசமாக ஒன்றன் பின் ஒன்றாக காற்றாடி வருவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நிரூபிக்க, முக்கிய ரூட்டுகளில், காலையும், மாலையும் அரசு கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RSram97
ஜூலை 15, 2025 07:50

இதே நிலை தான் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் நடக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் சென்னையில் தனியார் பேருந்துகள் அனுமதி இல்லை வெறும் அரசு பேருந்துகள் மட்டும் தான். ஆனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இங்கே குறைந்த பேருந்துகளை தான் இயக்குகிறார்கள். தேவை இல்லாத நேரங்களில் அதிகமான பேருந்துகள் இயங்குகிறது. மற்ற மாவட்டங்களிலாவது பரவாயில்லை அரசு பேருந்து தாமதமாக வந்தால் தனியார் பேருந்தை பிடித்து நாம் போக வேண்டிய இடத்திற்கு சென்றடையலாம் ஆனால் சென்னையில் அது கூட இல்லை என்ன செய்வது எல்லாம் விதி இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க தான் பலர் சொந்த வாகனம் வாங்கி ஓட்டுகிறார்கள் பெட்ரோல் செலவு இருந்தாலும் கூட வேறு வழி இல்லாததால்.


m.arunachalam
ஜூலை 15, 2025 00:13

பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க முடியும். அதன் மூலம் இந்த பயண நெருக்கடியை வெகுவாக சரி செய்யலாம் .


PENTAGANINFOTEK SHARAVANAKKUMAR
ஜூலை 14, 2025 18:46

நிச்சயமாக தவறான அதிகாரிகளே காரணம் காலை மாலை peakhoursl ல் அரசு பஸ்கள் 30 செகண்டுக்குள்ள 4 பஸ்கள் சென்றுவிடும் பின் 20 நிமிடம் பஸ் ஏ இருக்காது அப்போது தனியார் பஸ் வந்தால் பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவராகள் வேறு வழி இன்றி தொங்கியபடி பயணம் செய்கின்றனர் .பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர் .அசம்பாவிதம் நடந்த பின் கத்தி பயன் இல்லை இதற்கு பொறுப்பானவர் தண்டிக்க பட வேண்டிய குற்றவாளி ஆவார்


sasidharan
ஜூலை 14, 2025 09:38

நிச்சயமாக லஞ்சம் கை மாறுகிறது தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து. தனியார் பஸ்கள் பருத்தி முட்டையை அடைப்பது போல் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களே அதிகம். காவல் துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை