மின் கருவி தொகை அதிகம்: மண்டல தலைவர் குற்றச்சாட்டு
கோவை: கோவை நகர் பகுதியில், 52,081 தெருவிளக்குகள், 3,563 மின் கட்டுப்பாட்டு கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், 3,130 தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகளாகவும், 433 ஊழியர்களால் இயக்கப்படும் மின் கட்டுப்பாட்டு கருவிகளாகவும் உள்ளன. ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் இக்கருவிகளை இயக்குவதில்லை. அதனால், அவற்றை தானியங்கி கருவிகளாக மாற்ற, மாநகராட்சி உத்தேசித்துள்ளது. இரண்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து மதிப்பீடு பெறப்பட்டது. இதற்கு, 2 கோடி ரூபாய் செலவாகுமென திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக தெருவிளக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளும் மதிப்பீட்டில் இச்செலவினத்தை மேற்கொள்ள, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இப்பணியை செய்ய, நேற்று முன் தினம் நடந்த கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டது. மதிப்பீடு தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக, தி.மு.க.,வை சேர்ந்த கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி, மன்றத்தில் பகிரங்கமாக குற்றச்சாட்டை பதிவு செய்தார் . அவர் பேசுகையில், ''தானியங்கி மின் கட்டுப்பாட்டு கருவியின் சராசரி மதிப்பு ரூ.48 ஆயிரம். வெளிச்சந்தையில் ரூ.28 ஆயிரம். மதிப்பீடு டபுள் மடங்காக இருக்கிறது. 433 கருவிகளுக்கு பதிலாக, 866 எண்ணிக்கை வாங்கி விடலாம். அதனால், மதிப்பீட்டை சரிபார்க்க வேண்டும்,'' என்றார். பொறியியல் பிரிவு அதிகாரிகள் பதிலளிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார். அதற்கான கோப்புகளை அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்த அதிகாரி, மன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், கிழக்கு மண்டல தலைவருக்கு மட்டும் காண்பித்தார்.