லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் சிறையில் அடைப்பு
கோவை : லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட பெண் சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர் சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை, சித்தாபுதுார், தனலட்சுமி நகரை சேர்ந்த கருப்புசாமி என்பவர், வெள்ளலுாரிலுள்ள, சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலம் வாங்கியதற்கான அசல் பத்திரத்தை கேட்டு விண்ணப்பித்தார். அப்போது, சார்பதிவாளர் (பொறுப்பு) நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளர் பூபதிராஜா ஆகியோர் அசல் பத்திரத்திற்கு லஞ்சம் கேட்டனர். கருப்புசாமியிடமிருந்து, 35,000 ரூபாய் லஞ்ச பணத்தை இருவரும் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். சார்பதிவாளர் பயன்படுத்திய காரிலிருந்த கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து இருவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கைதான இருவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசேதனை செய்யப்பட்ட பிறகு, நேற்று கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மோகனரம்யா உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.