உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ஈ.பி.,யில மெட்டீரியல் இல்லை விவசாயிக கஷ்டம் புரியல

உடுமலை, கொங்கல்நகரம் நால்ரோட்டில், வெயிலுக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்ற விவசாயிகள், தங்கள் வேதனையை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதாவது:வெயிலு இந்த வருஷம் முன்னாடியே வந்து கொளுத்துது. தோட்டத்துல தண்ணீர் பாய்க்காம இங்க நின்னுட்டு இருக்கீங்க என ஒருவர் ஆரம்பித்தார்.அதற்கு மற்றவர், அட நீங்க வேற, எங்க தோட்டத்து லைன்ல கரென்ட் போயி மூணு நாளாச்சு. அப்புறம் எங்க தண்ணீர் விடறது, என்றார். மூணு நாளா, லைன் ரெடி பண்ணாம ஏன் விட்டீங்க; ஈ.பி., ஆபிசுல சொல்லியாச்சா என்றார்.ஆபிசுல எல்லாம் அப்பவே சொல்லிட்டோம். ஆனா, டிரான்ஸ்பார்மர் சரி பண்றதுக்கு எங்ககிட்ட எந்த மெட்டீரியலும் இல்லைனு சொல்றாங்க. வெளியில இருந்து பொருட்களை எடுத்துட்டு வர்றது; மாட்டற வரைக்கும் எல்லா செலவும் விவசாயிகதான் செய்யணுமாம்.எல்லா விவசாயிகளையும் ஒண்ணு சேர்த்து, வசூல் பண்ணி, அதை ஈ.பி.,க்காரங்க கிட்ட கொடுத்து ரெடி பண்றதுக்குள்ள போதும், போதும்னு ஆயிரும்.போன வாரம் கூட பக்கத்து ஊருக்காரங்க இப்படி செலவு பண்ணிதான் டிரான்ஸ்பார்மரை சரி பண்ணிணாங்களாம். வெயில் காலத்துல இப்படி சோதிக்கறாங்க.பியுஸ் போடறதுல இருந்து டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு வரை எல்லாத்தையும் நம்ம தலையில கட்டிடறாங்க. விசாயிகளுக்கு அதை செய்யறோம்; இதை செய்யறோம்னு சொல்ற அரசாங்கம் எதையும் கண்டுகறது இல்லை; அதிகாரிகளும் மதிக்கறது இல்லை. என்றபடி அங்கிருந்து கிளம்பினர்.

நான் அறங்காவலர் தெரியுமா! குண்டம் விழாவில் 'கெத்து'

ஆனைமலையில் நண்பருடன் டீ பருகிக் கொண்டு இருந்தேன். அப்போது, நண்பா, மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நடந்த விஷயம் தெரியுமா என பேச ஆரம்பித்தார்.மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கூட்டத்தை தவிர்க்க பாஸ் எல்லாம் கொடுத்து இருக்காங்க. அதுல வி.வி.ஐ.பி., பாஸ் வைத்து இருக்குறவங்களுக்கு தனி வழி அமைத்து இருந்தாங்க.அதுலயும் கூட்டமாக இருந்ததால, பாஸ் வைத்து இருந்தவங்கள செக் பண்ணி போலீசார் ஒவ்வொருத்தரா போக சொன்னாங்க. அப்போது அங்க வந்த கோவில் அறங்காவலர் ஒருத்தரு, போலீசை தள்ளிவிட்டு நான் யாரு தெரியுமா; நான் அறங்காவலர் உள்ள விடமாட்டீங்களா என்றாராம்.தள்ளி விட்டதால கோபப்பட்ட பெண் போலீஸ், 'யாராக இருந்தாலும் விட முடியாது; உங்க வீட்டு பெண்களை இப்படித்தான் தள்ளி விடுவீங்களா,' என ஆவேசமாக கேட்டார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கு இருந்தவங்க, இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வச்சாங்கப்பா. அவரு கெத்து காட்ட நினைச்சாரு; ஆனா வேற மாதிரி ஆகிடுச்சு, எனக்கூறினார்.பதவி வந்தால் பணிவு வரணும்னு சொல்வாங்க; இங்க பதவி வந்தா பணி இல்லாம போயிடுது, என, கூறியபடி நடந்து சென்றோம்.

வாரம் முழுதும் போட்டியா? பாடம் எப்ப தான் எடுப்பீங்க

உடுமலை வட்டார அரசு பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் பங்கேற்க சென்ற போது, ஆசிரியர்கள் இருவர் காரசாரமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்பள்ளியின் போட்டி ஒருங்கிணைப்பாளரும், வகுப்பு ஆசிரியரும் கல்வித்துறையின் மீது புகார் கூறிக்கொண்டிருந்தனர்.கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு சொல்லி சொல்லி, இப்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இல்லாத நிலையா இருக்கு.வாரம் ஒரு போட்டினு கல்வித்துறை அறிவிச்சுடுது. அதுக்கு மாணவர்கள் பங்கேற்ப உறுதி பண்ணி, எமிஸ்ல பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு போடுது. சரினு நம்மளும் போட்டிகள நடத்துனா, என்னங்க வாரம் ஏழு நாளும் போட்டி நடத்துறீங்க, பாடம் எப்பதான் நடத்துவீங்கனு பெற்றோர் நம்ம கிட்ட கொந்தளிக்கறாங்க.போட்டி நடத்துங்க, ஆனா பாடத்துக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கனு பெற்றோர் நமக்கு அறிவுரை சொல்லிட்டு போறாங்க. இப்படியே போனா, வரும் கல்வியாண்டுல சேர்க்கைக்கு பெற்றோர் கிட்ட எப்படி ஒத்துழைப்பு கேட்கபோறாம்னு தெரியல, என்றனர்.

ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துக்கு யார் தான் கடிவாளம் போடுவது

பொள்ளாச்சியில, இரு கண்டக்டர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன தான் பேசுகின்றனர் என்று ஆர்வமாக கேட்டோம்.அவர் பேசியதலிருந்து, அரசு போக்குவரத்து கழகங்களில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் இருக்கு. ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப அந்தந்த தொழிற்சங்கத்தின் அதிகாரம் மேலோங்கியே இருக்கும்.பொள்ளாச்சி பணிமனைகளில், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, அந்தந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுமதி கொடுக்கறாங்க. சமீப காலமாக, ஆளுங்கட்சியைச்சேர்ந்த தற்காலிக கண்டக்டர்களுக்கே பஸ் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கு. தவிர, தினமும் பணிக்கும் வரும் நிரந்தர கண்டக்டர்களை அவ்வப்போது, திருப்பி அனுப்பப்பட்டு 'ஆப்சென்ட்' காட்டுவதால், அவர்கள் 'அப்செட்' ஆகியும் வருகின்றனர். இதற்கு யார்தான் கடிவாளம் போடுவது என, புலம்பினர்.

ஓடைகளில் ராத்திரி நேரத்துல கிராவல் மண் கடத்தல் அமோகம்

உடுமலையில் இரு நண்பர்கள் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தனர். அதை காது கொடுத்து கேட்டேன்.உடுமலையிலிருந்து அமராவதி செல்லும் ரோட்டில், ஆண்டியகவுண்டனுார், மானுப்பட்டி, தம்புரான் கோவில், மலைமாசாணியம்மன் கோவில் பகுதிகளில், மலையடிவாரத்தில் வன எல்லை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஓடை பகுதிகளில், கிராவல் மண் கடத்தல் அமோகமாக நடக்குது.ராத்திரி நேரத்துல, கனரக வாகனங்களை கொண்டு, கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்து, பள்ளபாளையம், உடுமலை பகுதிகளில், லோடு, ஏழாயிரம் ரூபா வரை விற்பனை செய்யறாங்க.கடந்த வாரத்துல மட்டும், அரசுக்கு சொந்தமான நிலங்களிலிருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனிமவளங்கள் சுரண்டி எடுத்திருக்காங்க. ஏற்கனவே, இந்த பகுதியில மண் கொள்ளைக்கு பெயர் பெற்ற ஆளும்கட்சியை சேர்ந்த நபர், மீண்டும், கடந்த ஒரு வாரமாக ராத்திரி நேரத்துல கனிமவளக் கடத்தலில் ஈடுபட்டிருக்காரு.ஏற்கனவே, பல அடி ஆழத்திற்கு மலையடிவார வனப்பகுதியில் கிராவல் மண் கொள்ளை நடத்த நிலையில், கனிம வளத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்காததால், மீண்டும், வருவாய்த்துறை, போலீசார் 'ஆசி'யோடு கனிம வளக்கொள்ளை 'உதயம்' ஆகிவிட்டது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் அதிக வெளிச்சம், ஒலி காரணமாக வன விலங்குகளும் பாதிக்கின்றன. கனிமவளக் கடத்தலை தடுக்கவும், மண் கடத்தல் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கணும்னு பேசிக்கிட்டாங்க.

நகராட்சிய கண்டித்து போராடுறதுல நாலு பேருக்கு உள்நோக்கம் இருக்காம்!

வால்பாறை நகராட்சியில் நடப்பது குறித்து இருவர் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதிலிருந்து...வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் இருக்கு. இதில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 19 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவங்க. நகராட்சி வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்வதில் கடந்த சில மாதங்களாகவே தலைவருக்கும், தி.மு.க.,வை சேர்ந்த இரு கவுன்சிலர்கள், அ.தி.மு.க., வி.சி., ஆகிய நான்கு கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பனிப்போர் நிலவுது.இந்நிலையில், அந்த நான்கு கவுன்சிலர்கள், வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்யாமல், அரசு நிதியை நகராட்சி அதிகாரிகள், தலைவர் மற்றும் அவரது கணவர், கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து கடந்த, 16ம் தேதி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் வெளியிட்டனர்.ஆனா, கடைசி நேரத்தில் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காததால், நீதி மன்றம் செல்ல திட்டமிட்டிருக்கறதா சொல்லிட்டாங்க.இதனிடையே கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்படக்கூடாதுனு, தி.மு.க., கட்சி மேலிடம் தெரிவித்தும் அதை கண்டு கொள்ளாமல், அ.தி.மு.க., வி.சி. கட்சி கவுன்சிலர்களுடன் கூட்டணி அமைத்து, நகராட்சித்தலைவரை எதிர்ப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக பொதுமக்கள் சொல்லறாங்க. மொத்தம் உள்ள, 20 கவுன்சிலர்களின், 4 பேர் மட்டுமே இப்படி பண்ணுறதால மற்ற கவுன்சிலர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்குனு, சொல்லி முடித்தனர்.

கிராமத்துல 'ட்ரோன்' பறக்குது; ஆனா... பறக்கல!

கிணத்துக்கடவு, மெட்டுவாவி கிராமத்துல நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு பஸ் ஸ்டாப்பில் இருந்த இருவர்கள் 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு 'ட்ரோன்' சர்வே பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதிலிருந்து...இந்த ஏரியாவுல, 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க பலதரப்பட்ட முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு. 'ட்ரோன்' கேமரா வச்சு சர்வே பணிகளும் துவங்கினாங்க. இத கவனிச்ச மக்கள், கட்சிக்காரங்க எல்லாம் சேர்ந்து எதிர்த்தாங்க. இதனால இந்த திட்டம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கல.அதுக்கப்புறம் யாருக்கும் தெரியாம மறைமுகமா இரவு நேரத்தில 'ட்ரோன' பறக்க விட்டு சர்வே பணிகள் நடந்துச்சு. இத பத்தி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. அப்புறம் போலீஸ் ஸ்டேஷனிலும் இரவு நேரத்தில் 'ட்ரோன்' பறக்க விட்டு சர்வே பண்ணுறத நிறுத்தணும், அவங்கள கைது பண்ணணும்னு புகார் கொடுத்தாங்க.போலீசும் 'ட்ரோன்' பறக்கறத கண்காணிக்க பல முயற்சிகள எடுத்தாங்க. ஆனா, ராத்திரி நேரத்துல 'ட்ரோன்' பறக்கிறது மட்டும் இன்னைக்கு வரைக்கும் தடைபடல. மெட்டுவாவி சுற்றி இருக்கிற பல கிராமங்கள்ல விவசாய நிலத்துக்கு மேல 'ட்ரோன்' பறக்குது. இத விவசாயிகள் நிறைய பேரு கவனிச்சு அதை பிடிக்கணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனாலும் முடியல.இதை இப்படியே விடாமல், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் இறங்கி செயல்பட்டா, நல்லா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க. பஸ் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி