தம்பிகள் ஆட்சி நடப்பதே பல பிரச்னைகளுக்கு காரணம்: மத்திய இணை அமைச்சர் முருகன் தாக்கு
மேட்டுப்பாளையம்; “தமிழகத்தில் முதல்வர் மற்றும் அவர் மகனை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி நடப்பதே, பல பிரச்னைகளுக்கு காரணம்,” என மத்திய இணையமைச்சர் முருகன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. புகார் அளிக்க காவல் நிலையம் செல்வோர் மீதே தாக்குதல் நடக்கிறது. உதாரணத்திற்கு, திருத்தணி அருகே கர்ப்பிணி பெண் புகார் கொடுக்க சென்றபோது, அவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் போலீசார் விசாரணை என்ற பெயரில், 24 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில், முதல்வர் மற்றும் அவர் மகனை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி நடப்பதே, பல பிரச்னைகளுக்கு காரணம். சமூகநீதி விடுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., விடுதிகள் எப்படி உள்ளன என, முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று பார்க்க வேண்டும். அதேபோல, இங்கும் மாற்ற வேண்டும். நடிகர் விஜய், முதல் முறையாக வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், வெறும் மூன்று நிமிடங்கள் பேசியிருக்கிறார். இதெல்லாம் அரசியலுக்கு போதுமானதல்ல. தாய்மொழியை ஊக்குவிக்கும் தேசிய கல்வி கொள்கைகளின் ஒரு பகுதியாக, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை தமிழகத்தில் துவங்குவதற்கு தி.மு.க., அரசு சார்பில் டில்லியில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இங்கு வந்து மாற்றி பேசுகின்றனர். புதிதாக கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால் மட்டுமே, ஹிந்து அறநிலையத்துறை சாதனையாக கருத முடியும். இருக்கும் கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்துவது இயல்பான ஒன்று. இதில் சாதனையாக சொல்ல என்ன இருக்கிறது?தி.மு.க., கூட்டணியில் இருந்து மா.கம்யூ., - வி.சி., உள்ளிட்ட பல கட்சிகள் வெளியே வரும்.இவ்வாறு அவர் கூறினார்.