உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன்கடைகளில் பொருட்களின் எடை அரைகுறை! அறிவித்த புதிய திட்டமும் வரவில்லை

ரேஷன்கடைகளில் பொருட்களின் எடை அரைகுறை! அறிவித்த புதிய திட்டமும் வரவில்லை

கோவை; ரேஷன் கடைகளில் எடை போடும் எலக்ட்ரானிக் தராசு மற்றும் பி.ஓ.எஸ்., மெஷின் இரண்டையும் புளூடூத்தில் இணைத்து, பில் போடும் நடைமுறை, இந்த மாதம் அமலுக்கு வரும் என, வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், பொருட்களை அரைகுறை எடையில் வாங்கிச் சென்று, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள், எடைக்குறைவாக இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வழங்கல் துறை சார்பில், புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் கடையில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பில் போடும் பி.ஓ.எஸ்., மெஷினுடன் புளூடூத் இணைத்து, பில் போடும் முறை, தமிழக முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.இதற்கான தொழில்நுட்ப பணிகள் முடிந்து, இம்மாதம் (மே 1ம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என வழங்கல்துறை அறிவித்தது. ஆனால் கோவையில் எந்த ரேஷன் கடையிலும், நடைமுறைக்கு வரவில்லை.இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:கார்டுதாரர்களுக்கு சரியான எடையில், பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசு இந்த நவீன முறையை செயல்படுத்த உள்ளது. எடை தராசு மற்றும் பி.ஓ.எஸ்., கருவி இரண்டையும் புளூடூத் மூலம் இணைத்து, எடை போடும் போது, மிகச் சரியான எடையில் பொருட்கள் வழங்க முடியும். அதற்கான பணி நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில், இதற்கான 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இதில், 214 கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., கருவிகள் மிகவும் பழையதாக உள்ளது. அதை மாற்றி, புதிய கருவி இணைக்க வேண்டும்.ஆர்டர் கொடுக்கப்பட்ட கருவிகள் வந்தவுடன், பணிகள் முழுமையாக முடிய வாய்ப்பு உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சரியான எடை இருப்பதில்லை

ரேஷன்கார்டுதாரர் சிலர் கூறியதாவது:ரேஷன்கடை தராசில் எடை போட்டுக் கொடுக்கும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சரியான எடையில் இருப்பதில்லை. 10 கிலோ அரிசி வாங்கினால், 8 கிலோதான் இருக்கும். சர்க்கரை கிலோவுக்கு 800 கிராம்தான் இருக்கும். மண்ணெண்ணெய் வழங்கிய காலத்தில், ஒரு லிட்டருக்கு முக்கால் லிட்டர்தான் ஊற்றுவார்கள். அரிசி பற்றி கடை ஊழியர்களிடம் கேட்டால், 'எங்களுக்கு வரும் மூட்டையில், 10 கிலோ குறைவாக வருகிறது; நாங்கள் என்ன செய்ய முடியும்' என்கின்றனர். பாமாயில் பாக்கெட்டில் வருவதால் அப்படியே கிடைக்கிறது. எலக்ட்ரானிக் தராசில் எடைபோட்டு, பில்லில் கிலோ கிராம் எடை அளவு, குறிப்பிட்டு வரவேண்டும். அப்படி வந்தால்தான், ரேஷன் கடைகளில் நடக்கும் எடை மோசடியை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை