கிளாசிக்கல் நடனங்களுக்கு ரசிகர்கள் குறைவு: பிந்து லட்சுமி
பாலக்காடு; கிளாசிக்கல் நடனங்களுக்கு தற்போது ரசிகர்கள் குறைந்துள்ளனர் என, நடன கலைஞர் பிந்து லட்சுமி தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், வரும் 31ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. இதில் நேற்று, நடந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடனக் கலைஞர் பிந்து லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:கிளாசிக்கல் நடனங்களுக்கு தற்போது ரசிகர்கள் குறைந்துள்ளனர். ஆனால், சங்கீத கச்சேரிகளுக்கு கூடுதல் மேடைகள் உள்ளன. பிரபல நடன கலைஞர்களுக்கு மட்டும் தான் அதிக அரங்குகள் கிடைக்கின்றன.நடன ரசிகர்களை அதிகரிக்க தேவை என்னவென்றால் 'கிளாசிக்கல் டச்' தக்க வைத்து, வழக்கமான நடைமுறைகளில் இருந்து விலகி புதிய நடன வடிவங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி ஒரு நடன வடிவம் தான் 'கவிதை கலை'.மலையாளத்தில் உள்ள, 20 கவிஞர்களின் முக்கிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை இணைத்து, ஒன்றரை மணி நேரத்துக்கு 'கவிதை கலை' நடனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.செறுச்சேரி நம்பூதிரியின் 'கிருஷ்ணாகாதை'யில் இருந்து தொடங்கி சுகதகுமாரியின் 'நன்னி' என்ற கவிதையுடன் முடிகிறது, ஒன்பது கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடும் இந்த நடன நிகழ்ச்சி.இவ்வாறு, அவர் கூறினார்.