கோவை; கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, நிபந்தனையின்றி தமிழக அரசு வழங்கி, ஆறு மாதங்களாகியும், விமான நிலைய ஆணையம் இன்னும் ஏற்காமல் இருக்கிறது. இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை, எவ்வித நிபந்தனையுமின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்க, தமிழக அரசு முன்வந்தது.ரூ.2088.92 கோடி ஒதுக்கி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதாக, விமான நிலைய இயக்குனரிடம், மாவட்ட நிர்வாகம் கடிதம் கொடுத்தது.அச்சமயத்தில், நிலத்தை ஏற்பதாக உறுதியளித்து பதிலளிக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களாகியும், அந்நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் ஏற்காமல் இருக்கிறது. தகவல் அறியும் சட்டம்
இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஆணைய அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, 'தமிழக அரசிடம் கோரிய நிலம் இன்னும் பெறப்படவில்லை. விரிவான திட்ட அறிக்கை இன்னும் முழுமையாகவில்லை.விமான நிலையத்தில் மேற்கொள்ளும், எந்தவொரு மேம்பாட்டு பணியும், தமிழக அரசு வழங்கும் நிலம் மற்றும் வடிவமைப்பை பொறுத்து அமையும்' என, பதிலளிக்கப்பட்டிருக்கிறது.நிலம் வழங்குவதாக, மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கிய பிறகும், இன்னும் ஏற்காமல் இருப்பதால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தோன்றுகிறது. கோவையில் மட்டும்
ஏனெனில், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான நிலங்கள் ஏற்கப்பட்டு இருக்கின்றன. கோவையில் மட்டும் பெறுவதற்கு, தாமதித்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால், சர்வதேச அளவில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை துவக்கப்படும்.மேற்கு மண்டலங்களை சேர்ந்த மாவட்ட பயணிகள் மற்றும் சரக்குகள் கையாள கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவர்; சர்வதேச அளவில் பயன்பாடு அதிகரிக்கும். சந்தேகம் வருகிறது
அருகாமையில் உள்ள மற்ற விமான நிலையங்களை பாதிக்க வாய்ப்பிருப்பதால், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம், தொழில்துறையினர் மத்தியில் எழுந்திருக்கிறது.ஏனெனில், விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் நிலைய இயக்குனர் செந்தில்வளவன் மிகவும் ஆர்வம் காட்டி, கோப்புகளை விரைவுபடுத்தினார். அத்திட்டம் முன்னேறிச் சென்றது; இச்சூழலில் அவர் இட மாறுதல் செய்யப்பட்டார். புதிய அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை. விரிவாக்கப்பணி முடக்கம்
பொறுப்பு அதிகாரியால், இத்திட்ட பணிகளை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் தொடர்வதால், விமான நிலைய விரிவாக்கப் பணி முடங்கியிருக்கிறது.தொழில்துறையினர் கூறுகையில், 'தமிழக அரசு வழங்கிய நிலத்தை இன்னும் ஏற்காமல் இருப்பதற்கான காரணத்தை ஆணையம் விளக்க வேண்டும். நிலத்தை பெற்றுக் கொண்டு, விரிவாக்கப் பணியை துவக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அனைவரும் இவ்விவகாரத்தை கையில் எடுத்து, ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்' என்றனர்.
'காரணம் தேடுகின்றனர்'
கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''எவ்வித காரணமும் சொல்லாமல் திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கு நிலங்களை பெற்றிருக்கின்றனர். கோவைக்கு ஏதேனும் ஒரு காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். முழு எல்லை பகுதியையும், ஜி.பி.எஸ்., அளவீடு செய்ய வேண்டும் என, தற்போது கூறப்பட்டுள்ளது. மின் கம்பங்களை அகற்ற வேண்டும். 99 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தத்தில், தமிழக அரசுடன் கையெழுத்திட விரும்புகின்றனர். இவை எதுவுமே மற்ற விமான நிலையங்களில் கேட்கப்படவில்லை,'' என்றார்.