குடிமங்கலம்:வேளாண் விளைபொருட்களை காயவைத்து, இருப்பு வைக்கும் வகையில், கிராமம்தோறும், கூடுதலாக, உலர்களங்கள், குடோன்கள் அமைத்து தர, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பல ஆயிரம் ஏக்கரில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கொண்டைக்கடலை, கொத்தமல்லி, உளுந்து, தட்டை, சோளம், மக்காச்சோளம், கொள்ளு, பாசிப்பயறு உட்பட பல்வேறு தானியங்கள் சாகுபடி ஆண்டுக்கு இரு சீசன்களில், விதைப்பு செய்யப்படுகிறது.அறுவடை தருணங்களில், தானியங்களுக்கு போதிய விலை கிடைக்காமல், மானாவாரி விவசாயிகள், பாதிக்கின்றனர். சில விவசாயிகள், விளைபொருட்களை காய வைத்து, இருப்பு வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், அதற்கு தேவையான உலர்களங்கள் கிராமங்களில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், அதிக செலவு செய்து, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, தானியங்களை கொண்டு செல்ல, தயக்கம் காட்டுகின்றனர்.தற்போது, சில கிராமங்களில் வேளாண் விற்பனை வாரியம் சார்பிலும், நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், உலர் களங்கள் கட்டப்பட்டன. இவற்றில், அதிகளவு தானியங்களை காய வைக்க வழியில்லை.மேலும், இருப்பு வைக்க, குடோன் வசதியும் இல்லை. தற்போது மானாவாரி சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.எனவே, கிராம சாகுபடி பரப்பை கணக்கிட்டு, அதற்கேற்ப, உலர் களங்கள், குடோன்கள் கட்டி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என குடிமங்கலம் வட்டார சிறு, குறு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.