கோவை, வடவள்ளியைச் சேர்ந்த பாம்புபிடி வீரரான சந்தோஷ்குமார் கடந்த 15 வருடங்களாக, கொடிய விஷமுள்ள ராஜநாகம், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கொம்பேறி மூக்கன் என ஆயிரக்கணக்கான பாம்புகளை உயிருடன் பிடித்து, பாதுகாப்பாக காட்டில் விட்டவர்.குடியிருப்புப் பகுதிகளில் சிக்கிக் கொண்ட பாம்புகளால், மக்கள் பயப்படாமல் வாழ சந்தோஷ் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.ஆனால், மார்ச் 17ம் தேதி விடிந்த அன்றைய பொழுது, பாம்பால்தான் தனது வாழ்க்கை முடிய போகிறதென்பதை அவர் அறிந்திருக்கவில்லை.தொண்டாமுத்தூரில், நாகப்பாம்பு வந்ததாக தகவல் வந்ததும், உடனே அந்த இடத்துக்குச் சென்றார். பாம்பைப் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது அவரை கடித்தது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.என்ன செய்வதென தெரியாமல், கலங்கி நிற்கிறார் அவரது மனைவி சரண்யா.“எங்களுடையது காதல் திருமணம். 2 பிள்ளைகள். மூத்த மகள் அனாமிகா, 11; மாற்றுத்திறனாளி. இளையவள் மைனவிகா,7; அரசு பள்ளியில் படிக்கிறாள். எனது கணவரின் வருமானம் அதிகம் இல்லையெனினும், அவர் இருக்கும்போது தைரியமும், நிம்மதியும் நிறைய இருந்தன,'' ''அவரை பாம்பு கடித்தது எப்படி?''
''அன்று எப்போதும் போல பாம்பு பிடிக்க சென்றார். பாம்புக் கடிக்கான மருந்தை, கையில்தான் வைத்திருந்தார். ஆனால், முதலுதவிக்கு பிறகும், ரத்த அழுத்தம் 40க்கு கீழ் குறைந்துவிட்டது. பிறகு நடந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை( கண் கலங்குகிறார்),''. ''இப்போது குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?''
''அவரின் இறப்புக்குப் பிறகு, எங்கள் நிலை முழுமையாக சீர்குலைந்தது. அரசிடமிருந்தோ, அரசியல் கட்சியிலிருந்தோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், இப்பாது அம்மா வீட்டுக்கு வந்து விட்டோம்,''. ''நீங்கள் வேலைக்கு போகலாமே?''
''மாற்றுத்திறனாளி குழந்தையை விட்டுவிட்டு, எந்த வேலைக்கும் போக முடியாத நிலையில் சிக்கியிருக்கிறேன். கலெக்டர் அலுவலகத்திலிருந்து வந்து விசாரித்துச் சென்றார்கள். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை,'' ''அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''
''எனது கணவர் எத்தனையோ பேரை காப்பாற்றியிருக்கிறார். ஆனால், எங்களை காப்பாற்ற இன்று யாரும் இல்லை. கள்ளச்சாராயம் குடித்துப் பலியானோருக்குக் கூட, அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால், பாம்புகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் பாம்புகளுக்கும் ஆபத்து நேராமல், காத்தவரின் குடும்பம், இன்று நிர்க்கதியாய் தவிக்கிறது. தங்குவதற்கு ஒரு வீடு வேண்டுமென்று மட்டும்தான் கேட்கிறேன். நிதியுதவி இல்லையென்றாலும், குறைந்தபட்சம் குடியிருப்பதற்கான ஒரு இடமாவது அளிக்க வேண்டும்,” இரு பெண் குழந்தைகளுடன், அரசின் கருணைப்பார்வைக்காக காத்திருக்கிறார் சரண்யா.
''கள்ளச்சாராயம் குடித்துப் பலியானோருக்குக் கூட, அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால், பாம்புகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் பாம்புகளுக்கும் ஆபத்து நேராமல், காத்தவரின் குடும்பம், இன்று நிர்க்கதியாய் தவிக்கிறது,''.