உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் குளங்களை துார்வாரும் திட்டம் இப்போது இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் அதிருப்தி

சூலுார் குளங்களை துார்வாரும் திட்டம் இப்போது இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் அதிருப்தி

சூலுார்: ''சூலுாரில் உள்ள இரு குளங்களில், முழு கொள்ளளவுக்கும் நீர் நிரம்பியுள்ளதால், குளங்களை துார்வாரும் திட்டம் தற்போது இல்லை,'' என, நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், பெரிய குளம் மற்றும் சின்ன குளம் உள்ளன. பவானி சாகர் அணைக்கோட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளங்கள், இரண்டும் முறையே, 100 மற்றும், 80 ஏக்கர் பரப்பளவு கொண்டவை.இக்குளங்களின் நீரால், சுற்றுவட்டார விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளும் பயன் பெற்று வருகின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ராவத்துார் தடுப்பணையில் இருந்து, ராஜ வாய்க்கால் வாயிலாக இக்குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு வருகிறது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றில் ஓடும் கழிவு நீர்தான் குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால், குளங்களில் அதிகளவில் கழிவுகள் தேங்கி, நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. கழிவுகளை அகற்றி குளங்களை துார் வார வேண்டும் என, சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல்லடம், சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்த தன்னார்வலர் வித்ய பிரகாஷ், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, சூலுார் குளங்களை துார் வார கோரி அனுப்பிய மனுவில், 'கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக குளங்கள் துார் வாரப்படவில்லை. 2017ல் துார் வார கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குளங்களில் தண்ணீர் இருப்பதால் துார் வாரவில்லை என, நீர் வளத்துறை தெரிவித்தது. எனவே, இக்குளங்களை நம்பியுள்ள இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இரு குளங்களையும் துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரியிருந்தார்.அதன் பின், கடந்த மாதம், 'முதல்வரின் முகவரி' திட்டத்தின் மூலம் சில கேள்விகளை கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார்.அதற்கு, நீர் வளத்துறையின் பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருள் அழகன் அளித்துள்ள பதிலில்,'' சூலுார் பெரிய குளம் மற்றும் சின்ன குளம் தற்போது பெய்த பருவ மழை காரணமாக முழு கொள்ளளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால், தற்போது, இக்குளங்களை துார் வார இயலாத சூழ்நிலை உள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் குளங்களில் நீர் இருப்பு குறையும் பட்சத்தில், வண்டல் மண் இருப்பு கணக்கீடு செய்யப்பட்டு, துார் வாருவதற்கான உரிய மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.விவசாய உபயோகத்துக்காக வண்டல் மண் இருப்பு குறித்து, கலெக்டருக்கு அனுப்பி, மாவட்ட அரசிதழில் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, வித்ய பிரகாஷ் கூறுகையில், ''முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், நீர்வளத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அளித்த மனுக்களுக்கு, குளத்தில் தண்ணீர் உள்ளது. அதனால் துார் வாரவில்லை, என, பதில் கிடைத்துள்ளது.தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி விட்டு, துார் வார வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும். அடுத்த பருவ மழை துவங்கும் முன், குளங்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி