முகத்தில் வெட்டிய மூன்று பேர் கைது
பேரூர்: செல்லப்பகவுண்டன்புதூர், லீனா நகரை சேர்ந்தவர் ரகு, 38; டிரைவர். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து, கலந்தாலோசிப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த பிரவீன், 28, பிரகாஷ், 30, இளங்கோ, 54, கார்த்திகேயன், 32, தர்ஷன், 24 ஆகியோர், ரகுவை அழைத்துள்ளனர். அங்கு சென்ற ரகுவிடம், 'நீ வாட்ஸ்அப் குழுவில் இருந்து சென்றுவிட்டாய். அதனால், விநாயகர் சதுர்த்தியிலும் கலந்து கொள்ள கூடாது' என பிரவீன் கூறியுள்ளார். அப்போது, ரகுவிற்கும், பிரவீனுக்கும் வாக்குவாதம் முற்றி, பிரவீன் கத்தியால் ரகுவின் முகத்தில் வெட்டியுள்ளார். பிரகாஷ், இளங்கோ, கார்த்திகேயன், தர்ஷன் ஆகியோரும் ரகுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகிலிருந்தவர்கள், ரகுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இளங்கோ, கார்த்திகேயன், தர்ஷன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தப்பியோடிய பிரவீன் மற்றும் பிரகாஷை தேடிவருகின்றனர்.