பல் டாக்டர் வீட்டில் திருடிய மூவர் கைது ரூ.3 லட்சம், 136 பவுன் நகை, கார் பறிமுதல்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பல் டாக்டர் வீட்டில் நகை திருடிய மூவரை கைது செய்த போலீசார், 136 சவரன் நகை, மூன்று லட்சம் பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி பல் டாக்டர் கார்த்திக் 40. இவர் ஜன.12ம் தேதி குடும்பத்துடன் கொச்சினுக்கு சென்றார். ஜன. 14ம் தேதி கார்த்தியின் பக்கத்து வீட்டினர் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு, வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து இருப்பதாக தகவல் கொடுத்தனர். கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்த போது, வீட்டில் பீரோவில் இருந்த, 136 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது. மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.மாவட்ட எஸ்.பி., கார்த்திக்கேயன் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து, வீடு புகுந்து திருடியவர்களை தேடினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில், மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணியை சேர்ந்த வைரமணி,24, மணிசங்கர்,32, கார்த்திக், 37, ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 136 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
காருக்கு இரு பதிவு எண்கள்
எஸ்.பி., கார்த்திக்கேயன் கூறியதாவது:டாக்டர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவத்தில், மதுரையை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளோம். மொத்தம், 250 கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்டோர் பயன்படுத்திய காரில் இருவிதமான பதிவுஎண் கொண்ட நம்பர்பிளேட் வைத்து இருந்தது தெரிந்தது.பொதுமக்கள், வீடுகளை பூட்டி வெளியூருக்கு செல்லும் போது, உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துச் சென்றால் இரவு ரோந்து பணியை போலீசார் மேற்கொள்வர். மேலும், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.குடியிருப்போர் இணைந்து, வீதிகள், முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்களை பொருத்தலாம். பண்ணை வீடுகளில் வசிப்போருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.