அரசு கல்லூரியில் முப்பெரும் விழா
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, கல்லூரி ஆண்டு விழா என, முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், நுண்கலை மன்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சரவணன் விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கல்லூரியில் முதன்முறையாக இந்தாண்டு தமிழக அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில், பயிற்சி ஆசிரியர் அமர்த்தப்பட்டு தப்பாட்ட கலையில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தமிழரின் பாரம்பரிய இசையான பறை இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.