உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செக் போஸ்ட்களில் லஞ்சம்; மூன்று வனக்காவலர்கள் கைது

செக் போஸ்ட்களில் லஞ்சம்; மூன்று வனக்காவலர்கள் கைது

பெ.நா.பாளையம்; கோவை அருகே மாங்கரை, ஆனைகட்டி வனத்துறை செக் போஸ்ட்களில் லஞ்சம் வாங்கிய மூன்று வன காவலர்களை, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஆனைகட்டி ரோட்டில் தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டியில் வனத்துறை செக்போஸ்ட்கள் உள்ளன. இங்கு, 24 மணி நேரமும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணியாற்றும் சிலர், செக் போஸ்ட்களை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. தமிழகத்திலிருந்து மாங்கரை, ஆனைகட்டி ஆகிய செக்போஸ்ட்களை கடந்து கேரளாவில் அட்டப்பாடியில் உள்ள தோட்டங்களுக்கு மாட்டு சாணம் மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. லாரிகளில் கொண்டு செல்லப்படும் மாட்டு சாணத்துக்கு ஒரு லாரிக்கு ஆயிரம் ரூபாய் என, இரண்டு செக்போஸ்ட்களிலும் வன காவலர்கள் லஞ்சம் பெறுகின்றனர். இதே போல மாட்டுவண்டி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படும் விவசாய பொருள்களுக்கும், 100 ரூபாயிலிருந்து, 500 ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர். கடந்த வாரம் ஆனைகட்டி அருகே பெருமாள் முடியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடமும், வன காவலர்கள் சிலர் கட்டாய வசூலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மதுக்கரை, குரும்பபாளையம், ராமண்ணன் தோட்டம், கிருஷ்ணமூர்த்தி,48, டிப்பர் லாரியில் மாட்டு சாணம் எடுத்து சென்றபோது மாங்கரையில் இருந்த வன காவலர் செல்வகுமார் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதே போல ஆனைகட்டியில் செக் போஸ்டில் வனக்காவலர்கள் சதீஷ்குமார், 35, சுப்பிரமணியம், 55, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை, 6:00 மணிக்கு டிப்பர் லாரியில் சாணம் ஏற்றிக்கொண்டு மாங்கரை செக்போஸ்ட் வந்தார். கிருஷ்ணமூர்த்தி, ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாயை வனக்காவலர் செல்வகுமாரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் ஆகியோர் கையும், களவுமாக செல்வகுமாரை கைது செய்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் ஆனைகட்டியில் உள்ள செக் போஸ்டுக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றார். அவரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காவலர் சதீஷ்குமார், 40, போலீசார் கைது செய்தனர். அந்த சமயத்தில் அங்கு வன காவலர் சுப்பிரமணி என்பவர் வந்தார். அவர் மீது ஏற்கனவே கடந்த வாரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வன காவலர் சுப்பிரமணியத்தையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., ராஜேஷ் கூறுகையில், மாங்கரை மற்றும் ஆனைகட்டி செக்போஸ்ட்களில் லஞ்சம் பெறுவது தொடர்பான ஆடியோ பதிவுகள் புகாராக எங்களுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி, மூன்று வன காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். ஒரே நாளில் லஞ்சம் பெற்ற வழக்கில் மூன்று வன காவலர்கள் அடுத்தடுத்து கையும், களவுமாக பிடிபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை