தந்தை, மகனை தாக்கிய மூவர் சிறையிலடைப்பு
கோவை; வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 51. நேற்று முன்தினம் இவரது மகன், ஆதித்யா, 22 நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தார். விழா முடிந்த பின், தனது நண்பர்களுடன் பைக்கில் வந்து, வீட்டின் அருகில் இறங்கினார். அங்கு மதுபோதையில் நின்றிருந்த மூவர், ஆதித்யா உடன் தகராறில் ஈடுபட்டனர். கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், மூவரிடம் தகராறு செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார். அம்மூவரும் கோபால கிருஷ்ணன், ஆதித்யா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். கோபாலகிருஷ்ணன், ஆதித்யாவுக்கு காயம் ஏற்பட்டது. இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், வழக்கு பதிந்த சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தனர். கவுண்டம்பாளையம் அபிஷேக், 20, வேலாண்டிபாளையம் தினேஷ்பாபு, 20, சந்தோஷ், 19 ஆகிய மூவரும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் சிறையில் அடைத்தனர்.