காட்டு பன்றியால் மூன்று பேர் காயம்: பொதுமக்கள், விவசாயிகள் பீதி
பெ.நா.பாளையம்: கடந்த ஒரு மாதத்தில் காட்டுப்பன்றியால், 3 நபர்கள் காயமடைந்தனர்.கோவை வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யானையால் பயிர் சேதம் அதிகம் ஏற்படுகிறது. இது தவிர, தற்போது, காட்டுப்பன்றியால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.தினசரி இரவு மலையோர கிராமங்களில் முக்கிய சாலைகளை காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக கடக்கின்றன. இவை வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை தோண்டி சேதப்படுத்துகின்றன.காட்டுப்பன்றிகளின் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., தூரம் இருக்கும் காட்டுப்பன்றிகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்படும். 3 கி.மீ., தூரத்துக்கு மேல் வரும் காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும் எனவும், அறிவித்தது.ஆனால், தமிழகம் முழுவதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை வனச்சரகங்களுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், காட்டுப்பன்றியால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,'ஏற்கனவே வெள்ளியங்காடு ரங்கராஜ், தேக்கம்பட்டி சரத் ஆகியோர் காட்டுப்பன்றியால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது புஜ்ஜையன் காட்டுப்பன்றியால் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.