உடல் உறுப்பு தானத்தால் மூன்று பேருக்கு மறுவாழ்வு
கோவை: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காளிபட்டியை சேர்ந்த மணிகண்டன், வயது, 23, கடந்த 9ம் தேதி, விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவிநாசி ரோடு, கே.எம்.சி.எச்., கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 11ம் தேதி மூளைச் சாவு அடைந்தார்.மணிகண்டனின் உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல், கே.எம்.சி.எச்.,க்கும், ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.கே.எம்.சி.எச்., தலைவர் நல்ல பழனிசாமி கூறுகையில், ''உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த மணிகண்டனின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.பலரது உயிரைக் காப்பாற்ற உதவும், உடல் உறுப்பு தானம் குறித்து, இன்னும் அதிக விழிப்புணர்வு தேவை,'' என்றார்.