கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை
கோவை; கோவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, 2020, பிப்., 20ல், மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு அருகே கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணித்தனர். சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முகமது தபரீஷ்,28, பிரதீப்ராஜ்,32, விவியன்,30, ஆகியோரை பிடித்து சோதனையிட்ட போது, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருள் ஸ்டாம்ப் இருந்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவரும் அங்கிருந்து, கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்றுள்ளனர். மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, கோவை இ.சி., (போதை பொருள் கடத்தல் வழக்குகள்) கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், தலா ஐந்தாண்டு சிறை, தலா 5,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜரானார்.