உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாற்றுத்திறனாளிகள் தினவிழா

சாரதி - பேமேக் சார்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா, ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி சாலையில் உள்ள, சரஸ்வதி நடராசன் திருமண மண்டபத்தில், காலை 9:30 மணி முதல் நடக்கிறது. ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி, குழு நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இயற்கையின் அற்புதம்

சிறந்த இயற்கை விவசாயிகள் வரவேற்கும் இயற்கை விவசாயிகளின் நேரடி சந்தை, சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் உள்ள கே.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது. வாங்க... வந்து பாருங்க... இயற்கையின் கொடை தெரியும் என்று அழைப்பு விடுத்துள்ளனர், 'தாய்மண்' அமைப்பினர்.

புதிய ஷோரும் திறப்பு விழா

வாடிக்கையாளர்களுக்கு புதுவித ஷாப்பிங் அனுபவத்தை தந்து வருகிறது, கோவை நீலாம்பூரில் இருக்கும் ஸ்ரீ கணபதி மார்ட். தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுாரில் அமைந்துள்ள புதிய ஷோரும் திறப்பு விழா, காலை 9:00 மணியளவில் நடக்கிறது. விழிகள் பார்த்திராத வியத்தகு ஜவுளி கலெக்ஷனுடன் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என, நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மஹா கும்பாபிஷேகம்

ஈச்சனாரி பாடசாலை வீதியில், அருள்மிகு மாரியம்மன் மாகாளியம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள, அருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவிலில், நுாதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை 6:00 மணி முதல் துவங்கும் விழாவில், ஈச்சனாரி விநாயகர் கோவிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், சங்கல்பம், மகா தீபாராதனை, திருக்கல்யாண வைபவம், திருவீதி உலா, அன்னதானம் ஆகியவை நடக்கின்றன.

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

மதுக்கரை வட்டம், மயிலேறிபாளையம், அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோவிலில், திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, காலை 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், நாகசக்திபீடம் சிவசண்முக சுந்தரபாபுஜி சுவாமிகள், காசி அருள்வாக்கு சித்தர் மணிகண்டேசுவர சுவாமிகள் ஆகியோர், பெருவிழா வழிபாடுகளை துவக்கி வைத்து அருளாசி வழங்குகின்றனர்.

சித்தர்கள் கருத்தரங்கம்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில், பதினெண் சித்தர்கள் அருளிய ஆன்மிகத் தத்துவங்கள், பூஜை முறைகள் மற்றும் தெய்வீகக் கலைகளை தெரிந்துக் கொள்ளும் வகையில், பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் அருகில் உள்ள, குரு கல்யாண மண்டபத்தில், சித்தர்கள் கருத்தரங்கம் நடக்கிறது. காலை 7:00 மணி முதல், பதினெண் சித்தர்கள் அருளிய நவகோள்கள் வேள்வி, தலைமையுரை, ஒலிப்பேழை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ