உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலை உயராத தக்காளி; விவசாயிகள் கவலை

விலை உயராத தக்காளி; விவசாயிகள் கவலை

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தொடர் மழை பெய்து வரும்நிலையிலும், தக்காளி விலை உயராமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில், தக்காளி விலை அதிகரிக்கும். பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, நேற்று, 350 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வரும் நிலையிலும், தக்காளி விலை உயராமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,''தொண்டாமுத்துார் வட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக, இதுபோன்ற சமயங்களில், ஒரு டிப்பர் தக்காளி, 450 முதல் 550 ரூபாய் வரை விற்பனையாகும். ஆனால், தற்போது, விலை உயரவில்லை. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், மழைக்காலம் என்றால் விரைவில் அழுகிவிடும் என்பதாலும் வியாபாரிகள் அதிக அளவில் தக்காளி கொள்முதல் செய்வதில்லை. இதனால், மார்க்கெட்டில் தக்காளி தேங்கியுள்ளது. ''மழைக்காலத்தில், அறுவடைக்கு பணியாளர்கள் வருவதில்லை. கூடுதல் கூலி கொடுத்தே அறுவடை செய்ய வேண்டி உள்ளது. விலை உயராமல் இருந்தால், ஆள் கூலி, வண்டி வாடகை போக, விவசாயிகளுக்கு எதும் கிடைக்காது,''என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை