முன்னோர்களை நினைவு கூர கல்லறை திருநாள் அனுசரிப்பு
கோவை: மறைந்த உறவினர்கள், முன்னோர்களை நினைவு கூரும் வகையில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.தங்களின் குடும்பங்களில் நம்மோடு வாழ்ந்து, மறைந்த உறவினர்கள், முன்னோர்களை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர். அவ்வகையில் நேற்று உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரித்து மறைந்த உறவினர்கள், முன்னோர்கள் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்தனர்.கோவையில், சி.எஸ். ஐ., மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட கல்லறைகளில் நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி, மக்கள் தங்களின் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி, பூ மற்றும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தனர்.கோவையில் புலியகுளம் மற்றும் திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., கல்லறைகள் உட்பட பல்வேறு சி.எஸ்.ஐ., கல்லறைகளில் காலை ஏழு மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல், கத்தோலிக்க திருச்சபைக்கு உட்பட்ட சுங்கம், போத்தனுார், புலியகுளம், கார்மெல் நகர் உள்ளிட்ட பல்வேறு கல்லறைகளில் காலை மற்றும் மாலையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அருட்தந்தைகள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு புனித நீரால் கல்லறைகளை மந்திரித்தனர்.