அரசு பஸ்களில் டச் ஸ்கிரீன் மெஷின்; கண்டக்டர்களுக்கு வழங்க ஏற்பாடு
பொள்ளாச்சி; இ.டி.எம்., எனப்படும் தொடுதிரை மின்னணு டிக்கெட் வழங்கும் மெஷின்கள், அரசு பஸ் கண்டக்டர்களுக்கு வழங்கப்படவுள்ளது.அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளுக்கு உட்பட்ட அரசு பஸ்களில், டிக்கெட் பிரின்ட் செய்யும் பட்டன் அடங்கிய, எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் (இ.டி.எம்.,) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இதனால், கண்டக்டர்கள், வேகமாக டிக்கெட் வழங்குகின்றனர். மேலும், அவர்களின் பணிச்சுமையும் குறைந்துள்ளதுடன், பயண வழித்தடம், நேரம், உள்ளிட்ட விபரங்களை மின்னணு இயந்திர டிக்கெட்டுகளால் அறிந்து கொள்ள முடிகிறது.பயணப்பட்டியல், டிக்கெட் விற்பனை தொடர்பான விபரங்களை, உரிய அதிகாரிகள் உடனடியாகத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. குறிப்பாக, முறைகேடுகள் குறைந்தன. தற்போது, பட்டன் மெஷினுக்கு மாற்றாக, தொடுதிரை மின்னணு டிக்கெட் தருவிக்கப்பட்டு, கண்டக்டர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில், மூன்று பணிமனைகளில் இருந்து, 220க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது பயன்பாட்டில் உள்ள இ.டி.எம்., மெஷின்கள் பட்டன் வசதியுடன் உள்ளன. அதற்கு மாற்றாக, பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய டச் ஸ்கிரீன் இ.டி.எம்., மெஷின்கள், கண்டக்டர்களுக்கு வழங்கப்படவுள்ளது.குறிப்பாக, ஒரு பஸ்சுக்கு இரு இ.டி.எம்., மெஷின்கள் வழங்கப்படும். அதேநேரம், அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். மெஷினில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் மட்டுமே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் பயணியருக்கு வழங்க, கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, கூறினர்.