தொட்டா ஷாக் அடிக்கும்! மழை காலங்களில் எச்சரிக்கையாக இருங்க; மின்வாரியம் சார்பில் மக்களுக்கு அறிவுரை
பொள்ளாச்சி; 'மழை காலங்களில், மின்விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என, பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அரசுத்துறைகள் வாயிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மின் விபத்து நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்வாரிய அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இடி அல்லது மின்னலின் போது, தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.கோவை மின்பகிர்மான தெற்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் அறிக்கை:மழை காலங்களில், இடி, மின்னலின் போது, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது பாதுகாப்பானதாகும்.மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும் போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு, அந்த மின்பாதையில் மின்சாரம் தடை செய்த பின்னரே, மரக்கிளையை வெட்ட வேண்டும்.மழை காலத்தில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அதன்பின், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இடியுடன் மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கும் இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டி துணி உலர்த்துதல், வளர்ப்பு பிராணிகளை கட்டி வைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.மின்கம்பி அறுந்து கிடந்தாலோ, அல்லது கம்பி அறுந்து கிடப்பதை கண்டறிந்தாலோ யாரும் அருகில் செல்ல கூடாது. மின் கம்பியை தொடக்கூடாது. உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். பொதுமக்கள் மிகுந்த முன் எச்சரிக்கையோடு செயல்பட்டு, விபத்துகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.