பதுங்கிய சிறுத்தையால் பதறும் சுற்றுலா பயணியர்
வால்பாறை; வால்பாறையில் குடியிருப்பு பகுதி அருகே, பகல் நேரத்தில் பதுங்கும் சிறுத்தையால், சுற்றுலாபயணியர் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தைகள் தொடர்ந்து நடமாடுகின்றன. இதனால், இந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள், இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.இந்நிலையில் சுற்றுலாபயணியர் தங்கும் விடுதி அதிக அளவில் உள்ள, காமராஜ்நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், பகல் நேரத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பதை, சுற்றுலாபயணியர் நேரில் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த சிறுத்தைகள், சமீப காலமாக மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வரத்துவங்கியுள்ளன. தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள காமராஜ்நகர் பகுதியில், சிறுத்தை பகல் நேரத்தில் கூட பதுங்கியுள்ளது.இதனால், மாலை நேரங்களில் குழந்தைகள் வெளியில் விளையாடக்கூட முடியவில்லை. அதன் நடமாட்டத்தால் உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலாபயணியருக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.