பூங்காவை புறக்கணிக்கும் சுற்றுலா பயணியர் வசதிகள் இல்லாததால் ஏமாற்றம்
வால்பாறை, ; வால்பாறை தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.வால்பாறை நகரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. ஆட்சி முடியும் தருவாயில் அவசரக்கோலத்தில் பூங்கா திறக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த பூங்கா, கடந்த, 2022ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆனால், பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.இந்நிலையில், பல மாதங்களாக பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், காலை நேரத்தில் பாம்புகள் தென்படுகிறது. மாலை நேரத்தில் சிறுத்தை புதரில் பதுங்கி, சுற்றுலா பயணியரை அச்சுறுத்தி வருகின்றன.மேலும், தாவரவியல் பூங்கா என்பது பெரளவில் மட்மே உள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில், பூச்செடிகள் கூட இல்லை. குழந்தைகள் விளையாடும் சாதனங்கள், கடந்த ஓராண்டாக உடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.இதனால், வால்பாறை மக்களும், சுற்றுலா பயணியரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர், பூங்காவில் எதுவுமே இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:பள்ளி விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் அதிக அளவில் பூங்காவை கண்டு ரசிக்க வருகின்றனர். ஆனால், பூங்காவில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால், சமீப காலமாக விரல் விட்டு எண்ணும் அளவிலேயே சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.பூங்காவுக்குள் நுழையும் போதே, ஏதோ புதருக்குள் செல்வது போல் உள்ளது. பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவை சுற்றியுள்ள செடிகள் கூட புதரில் மறைந்து கிடக்கின்றன. பூங்காவை காண வரும் மக்களுக்காக கட்டப்பட்ட கேண்டீனும் திறக்கப்படவில்லை. சுற்றுலா பயணியரையும், உள்ளூர் மக்களையும் கவரும் வகையில், நகராட்சி பூங்காவை அழகுபடுத்துவதோடு, பூச்செடிகள் அதிக அளவில் வளர்க்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
அழகுபடுத்தப்படும்!
வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் தொடர்மழையால், பூங்கா அழகுபடுத்தும் பணி முழுமையாக செய்ய முடியவில்லை. கோடை விழாவுக்கு முன்னதாக, பூங்காவை அழகுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் மாற்றியமைக்கப்படும். பூங்காவை சுற்றியுள்ள புதர்கள் உடனடியாக அகற்றப்பட்டு, போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்' என்றனர்.