| ADDED : ஜன 18, 2024 11:54 PM
வால்பாறை : தடையை மீறி ஆறுகளில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணியரை தடுக்க, போலீசார் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், சுற்றுலா பயணியர் அதிகளவில் செல்லும் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை, சோலையாறுஅணை கரையோரப்பகுதிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு அக்.,20ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா வந்த, கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதையில் உள்ள ஆற்றில் குளிக்கும் போது, நீர்சூழலில் சிக்கி உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து, சிறுகுன்றா, சின்னக்கல்லாறு, பிர்லாநீர்வீழ்ச்சி, சோலையாறு அணை உள்ளிட்ட, 20 இடங்களில் சுற்றுலா பயணியர் செல்ல மாவட்ட கலெக்டர் தடை விதித்தார்.தடை செய்யப்பட்ட இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தடை செய்யப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் குளிக்க துவங்கியுள்ளனர். ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணியரை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.