சம்பளத்தில் பஞ்சப்படி குறைப்பு தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு
வால்பாறை,; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலைவாசி புள்ளியை காரணம் காட்டி, 10 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டதற்கு தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வால்பாறையில் உள்ள தேயிலை தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 453.04 ரூபாய் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை விலைவாசிக்கு ஏற்ப பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.இந்நிலையில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலியிலிருந்து, 10 ரூபாய் 50 பைசா (பஞ்சப்படி) குறைக்கப்பட்டுள்ளது. கூலி குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தொழிற்சங்க தலைவர்கள் கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) ஆகியோர் கூறுகையில், 'தொழிலாளர்களின் சம்பளத்தில் பஞ்சப்படியை காரணம் காட்டி, 10 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே குறைவான கூலி வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் வெளியேறி வரும் நிலையில், வழங்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகளின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, இனி வரும் காலங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலியை குறைக்காமல் இருக்கவும், ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.