தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினர்
கோவை; கோவை, காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை, எல்.பி.எப்., தொழிற்சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையில் உள்ள என்.டி.சி., மில்கள், 2020 முதல் செயல்படவில்லை. பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.ஐந்து மாதங்களாக அத்தொகையும் வழங்கப்படவில்லை. நிலுவை தொகையும் வழங்கவில்லை. தென்மண்டலத்தில் மட்டும், 2,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, எல்.பி.எப்., தொழிற்சங்க பொது செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் பூட்டு போடும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், போராட்டத்தை துவக்கி வைத்தார்.பார்த்தசாரதி கூறுகையில், ''தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, தி.மு.க., தொழிற்சங்கம் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. ஐந்து மாத சம்பள பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே, எங்கள் போராட்டத்தின் நோக்கம். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால், குடும்பத்தினரை எவ்வாறு கவனிப்பர். இப்பிரச்னைக்கு தீர்வு காணவே, போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.15 நாட்களுக்குள் சம்பளம் தராவிட்டால், வீடு திரும்பா போராட்டம் நடத்தப்படும்; குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து, இங்கு அமர்வதை தவிர வேறு வழியில்லை,'' என்றார்.போராட்டத்தில், தி.மு.க., சட்டத்துறை இணை செயலாளர் அருள்மொழி, எல்.பி.எப்., துணை பொது செயலாளர் சிவகுமரன், வார்டு செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.