மேம்பாலப்பணிகள் நடப்பதால் 90 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கோவை; கோவை மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து இன்று முதல், 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி காந்திபுரம் பூமார்க்கெட், வடகோவை, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், வடகோவை பாரதி பார்க் ரோடு வழியாக சென்று அரசு தொழில்நுட்பக் கல்லுாரி வழியாக தடாகம் ரோடு, வெங்கிடாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக கவுண்டம்பாளையம் ரோடு சென்று துடியலுார் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். கவுண்டம்பாளையம் வழியாக கோவைக்கு கோவை நகருக்குள் வர அனைத்து இலகுரக, கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. காந்திபுரம், அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம், கணபதி வழியாக காந்திபுரம் செல்லலாம். சங்கனுார் சந்திப்பு, கண்ணப்ப நகர் புதுப்பாலம், சிவானந்தா காலனி வழியாகவும் காந்திபுரம் செல்லலாம். காந்திபுரம் சிவானந்தா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள், சரக்கு வாகனங்கள், சாய்பாபா கோயில், அழகேசன் ரோடு, தடாகம் ரோடு, வெங்கிடாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக, மேட்டுப்பாளையம் செல்லலாம். என்.எஸ்.ஆர். ரோடு வழியாக, நகருக்குள் வரும் அனைத்து கனரக வாகனங்களும் என்.எஸ்.ஆர்., ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, பாரதி பார்க் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.