சென்னை, பெங்களூருக்கு ரயில்கள் இயக்கணும்! நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற பறந்தது மனு
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி வழியாக, சென்னை, பெங்களூருக்கு ரயில்கள் இயக்கவும்; ஏற்கனவே இயங்கிய ராமேஸ்வரம் ரயிலை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்பயணியர் நலச்சங்கத்தின் சார்பில், ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பி வலியுறுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி வழியாக, பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் கடந்த, 2015ம் ஆண்டும், பொள்ளாச்சி - போத்தனுார் பாதை, 2017ம் ஆண்டு அகல ரயில் பாதையாகவும் மாற்றப்பட்டது. ஆனால், குறைந்த ரயில்களே இயக்கப்படுகின்றன.பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ரயில் பயணியரின் நீண்ட நாள் கோரிக்கைகளை, தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில மக்களின் நலனுக்காக நிறைவேற்றிட, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே வாரியம், அதிகாரிகளுக்கு பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் சார்பில் மனு அனுப்பி வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:திருச்சூர் (குருவாயூர்) மற்றும் எர்ணாகுளத்துக்கு செல்ல, பக்தர்கள், சுற்றுலா பயணியர், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் வகையில், எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயிலை ஆனைமலை ரோடு வழியாக, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.சென்னை பகுதியில், ஆயிரக்கணக்கான ஐ.டி., மற்றும் அரசு ஊழியர்கள், பொள்ளாச்சி பகுதியில் இருந்து வேலைக்குச் சென்று வருகின்றனர். மேலும், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் சென்னை விமான நிலையம் வாயிலாக உள்நாடு, சர்வதேச பயணங்களை மேற்கொள்ளலாம்.தற்போது, பாலக்காடு - சென்னை ரயில் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொள்ளாச்சி - சென்னை சென்ட்ரல் இடையே (கிணத்துக்கடவு வழியாக) தினசரி ரயிலை இயக்கலாம் அல்லது கோவை - சென்னை ரயிலை பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும்.மீட்டர் கேஜ் காலத்தில், கோவை - ராமேஸ்வரம் தினசரி ரயில் (பொள்ளாச்சி, பழநி வழி) ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இயங்கி வந்தது. இதன் வாயிலாக, மீன்கள், பூக்கள், காய்கறிகள் ஏரளமான பொருட்கள் அனுப்பப்பட்டன. கடந்த, 2017ம் ஆண்டுக்கு பின், இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் துவங்கப்படவில்லை.சேலம் கோட்டம் சார்பில், 2019ல் இந்த ரயிலை (தற்காலிக அட்டவணையுடன்) இயக்க திட்டமிடட்டது. தற்போது புதிய பாம்பன் பாலம் துவங்கப்பட்ட நிலையில், மங்களூரு - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (பொள்ளாச்சி வழியாக) மற்றும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.தனியார் ஐ.டி., துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர், பெங்களூருவில் உள்ளனர். வணிகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணியர் தற்போது கோவை சென்று பயணிக்க வேண்டியுள்ளது.இதற்காக, பெங்களூரு - கோவை உதய் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். கடந்தாண்டு ஏப்., 17ம் தேதி பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதையில், டபுள் டெக்டர் ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடந்தது.தெற்கு ரயில்வே வாயிலாக கடந்தாண்டு மே 15ம் தேதி புதிய ரயில்வே அட்டவணையில் இந்த நீட்டிப்பு இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயிலை, போத்தனுார் - கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை நீட்டித்து உடனடியாக இயக்க வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.
நடவடிக்கை எடுக்கணும்!
ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெறும் எம்.பி.,க்கள், அமைச்சர்களை சந்தித்து மனு கொடுப்பதோடு பணிகள் முடிந்து விட்டதாக கருதுகின்றனர்.இதுவரை, மூன்று லோக்சபா தேர்தல் முடிந்தும் கோரிக்கைகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு, எம்.பி.,கள் செயல்பட்டு பொள்ளாச்சி வழியாக ரயில்கள் இயக்கத்தை அதிகரிக்கவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும், ரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.