உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிரஷர், குவாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் நிறுத்தம்: தொழில்நுட்ப கோளாறா... வசூலில் ஏற்பட்ட தகராறா?

 கிரஷர், குவாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் நிறுத்தம்: தொழில்நுட்ப கோளாறா... வசூலில் ஏற்பட்ட தகராறா?

கோவை: கோவை மாவட்டத்தில், 180 கிரஷர்களும், 100 கல்குவாரிகளும் உள்ளன. இதிலிருந்து போல்டர், ஜல்லி, சைஸ்கல், கல்லுக்கால், எம்.சேண்ட், பி.சேண்ட் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கோவையிலுள்ள கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்துவோர் ஒவ்வொருவரும் தேர்தல் நிதியாக, ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று, புதுக்கோட்டையை சேர்ந்த கட்சியினர் வலியுறுத்தினர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர்கள் குவாரிகள் தோறும் நேரில் சென்று, தேர்தல் நிதி கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர். நிதி தர மறுத்ததால், நேற்று முதல் கட்டுமானப்பொருட்களை எடுத்து செல்லும் லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்காமல் நிறுத்தி விட்டதாக, குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். டிரான்சிட் பாஸ் இல்லாமல், கிரஷர்களிலிருந்து கட்டட கட்டுமானப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்ல முடியாது. குவாரிகளிலிருந்து கற்கள் வெட்டி எடுத்து, கிரஷர்களுக்கு கொண்டு செல்லவும் முடியாது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக கற்கள் வெட்டி எடுக்கும் பணியும், வெட்டி எடுத்த கற்களை கட்டுமானப்பொருட்களாக மாற்றும் பணியும் தடைபட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், கட்டுமானப்பொருட்களின் விலை கடுமையாக உயரும். கோவை மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில், ''கடந்த சில தினங்களாக சர்வர் பழுது காரணமாக, டிரான்சிட் பாஸ் வழங்கப்படவில்லை. சர்வர் பழுது சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்தவுடன், வழக்கம் போல் டிரான்சிட் பாஸ் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை