பணமில்லாத சிகிச்சை முறையில் பணம் செலுத்தினால்தான் சிகிச்சை! குளறுபடிக்கு எதிராக எழுந்தது குரல்
கோவை: பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் பிரதம ஜன ஆரோக்கிய யோஜனா, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், பொதுமக்கள் ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சையை தனியார், அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள முடியும். சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ், 1000க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளுக்கும், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கும், கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாக, சி.வி.சி., நுகர்வோர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் குற்றஞ்சாட்டுகிறார். அவர் கூறியதாவது: மத்திய, மாநில அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் பணமில்லா சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால், நோயாளிகளிடம் முழு தொகையும் முன்கூட்டியே செலுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் தவறாக வழிநடத்துகின்றன. மருத்துவ அவசர நிலை காரணமாக, வேறு வழியின்றி கட்டாயமாக பணம் செலுத்துகின்றனர். இத்திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு நிவாரண தொகை செல்ல வாய்ப்பில்லை எனும் சூழலில், மருத்துவ நிர்வாகங்களின் செயல்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முன்பணம் செலுத்தாதவர்களுக்கு சிகிச்சை மறுப்பதும், தாமதிப்பதும் நடக்கிறது. இதுகுறித்து, தெளிவான சுற்றறிக்கை வழங்குவதுடன், பொதுமக்களுக்கும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன் பணம் செலுத்த கட்டாயப்படுத்தும் மருத்துவமனைகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, மத்திய, மாநில சுகாதாரத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.