மின் கம்பிக்கு கீழ் மறுநடவுசெய்யப்படும் மரங்கள்; கஞ்சப்பள்ளி மக்கள் அதிருப்தி
அன்னுார்; மின்கம்பிகளுக்கு கீழ் மரங்கள் மறு நடவு செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து, கருவலுார், அன்னுார், பொகலுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி துவங்கி உள்ளது.இதில், கோவை மாவட்டத்தில், கஞ்சப்பள்ளி பிரிவில் துவங்கி மேட்டுப்பாளையம் வரை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள 1342 மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறை, கிரீன் கேர் அமைப்புடன் இணைந்து மரங்களை மறு நடவு செய்யும் பணியை இரு வாரங்களுக்கு முன் துவக்கியது.ஆரோக்கியமான பூவரசு, வேம்பு, புங்கன், ஆயன், அரசு உள்ளிட்ட மரங்களை தேர்ந்தெடுத்து, கிளைகளை வெட்டி, மரத்தின் எடையை குறைத்து, வெட்டப்பட்ட பகுதியில் சாணம் மற்றும் சாக்கு வைத்து கட்டுகின்றனர்.பின்னர் சாலை அமைக்க இடையூறு இல்லாத பகுதியில் குழி தோண்டி பசுஞ்சாணம் நிரப்பி அதில் நட்டு வருகின்றனர்.தற்போது கஞ்சப்பள்ளி பிரிவில் துவங்கி, ஊத்துப்பாளையம் வரை, மரங்கள் மறு நடவு செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கஞ்சப்பள்ளி கிராம மக்கள் கூறுகையில், '20க்கும் மேற்பட்ட மரங்களை குறைந்த அழுத்த மின் கம்பி செல்லும் பாதையில் கம்பிக்கு நேர் கீழே மறுநடவு செய்துள்ளனர். சில ஆண்டுகளில் இந்த மரம் கம்பியின் உயரத்திற்கு வந்து விடும். பின்னர் மரத்தை வெட்ட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு அகற்றி நட வேண்டும். இதனால் தற்போதைய வேலை வீணாகிவிடும். எனவே மின் கம்பி செல்லாத பகுதியில் மரங்களை மறு நடவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மறு நடவு செய்வதன் நோக்கமே நிறைவேறாது,' என்றனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலையின் இருபுறமும் போதிய இடம் இல்லாததால் ஓரிரு இடங்களில் மின் கம்பிக்கு கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இனிமேல் மரங்களை மின் கம்பிகளுக்கு கீழ் நடாமல் வேறு இடத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.