உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீச்சல் குளத்துக்காக வெட்டி அகற்றப்பட்ட மரங்கள்

நீச்சல் குளத்துக்காக வெட்டி அகற்றப்பட்ட மரங்கள்

கோவை: வ.உ.சி., பூங்காவில் நீச்சல் குளம் கட்டுமான பணிகளுக்காக பல ஆண்டுகள் கடந்த மரங்கள் வெட்டப்படுவது, சூழல் ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை வ.உ.சி., உயிரியல் பூங்கா மூடப்பட்டு முதலை, பாம்பு, மான்கள் உள்ளிட்டவை வனத்துறையினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் விடுவிக்கப்பட்டன. கடந்தாண்டு இறுதியில், பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் இரு நீச்சல் குளங்கள் அமைக்க திட்டமிட்ட மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியது. அனுமதி கிடைத்ததையடுத்து பணிகள் துவங்கியுள்ளன.

Galleryஅதன்படி, நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 25 மீட்டர் அகலம், 50 மீட்டர் நீளத்திலும், பொது மக்கள் பயன்பாட்டுக்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 12.5 மீட்டர் அகலம் மற்றும் 25 மீட்டர் நீளத்திலும் நீச்சல் குளம் அமையவுள்ளது; ஆழம் 1.2-1.8 மீட்டர் வரை இருக்கும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளிக்கும் வசதி, உடை மாற்றும் அறை, சி.சி.டி.வி., கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கென தற்போது மரங்கள் வெட்டி இடவசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. பத்து ஆண்டுகளை கடந்த ஆலமரம், வேப்ப மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானபோதே இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது என, சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பல வகையான பறவை இனங்கள், வவ்வால் போன்றவை பூங்கா வளாகத்தில் இருக்கும் மரங்களை வாழ்விடமாக கொண்டுள்ளன. தற்போது இந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது சூழல் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 'தேவையான இடங்களில் மட்டும் வெட்டியுள்ளோம்' 'குழந்தைகள், பெரியவர்களுக்கு என்று 'பப்ளிக் பூல்', விளையாட்டு வீரர்கள், மாணவர்களுக்கென்று தனி நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. இதற்கென மரங்கள் வெட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேவை இருக்கும் இடங்களில் மட்டுமே மரங்களை வெட்டி, மற்ற இடங்களில் மரங்களை காப்பாற்றி உள்ளோம். அரசிடம் முறையான அனுமதி பெற்றே வெட்டியுள்ளோம். வளர்ச்சி திட்டங்களுக்காக சில சமயங்களில் மரங்கள் வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது' என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ