உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேமிப்பு கணக்கு துவங்கிய பழங்குடியின மக்கள்; தேசிய அஞ்சலக வார விழா வில் ஆர்வம்

சேமிப்பு கணக்கு துவங்கிய பழங்குடியின மக்கள்; தேசிய அஞ்சலக வார விழா வில் ஆர்வம்

வால்பாறை; தேசிய அஞ்சலக வாரவிழாவையொட்டி, புதிய சேமிப்பு துவங்க பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய அஞ்சல் துறை சார்பில், வரும், 13ம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வால்பாறையில் புதிய சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணியில் அஞ்சலக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வால்பாறை அடுத்துள்ள வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆய்வாளர் வெங்கட், போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி ஆகியோர் தலைமையில் நடந்தது. விழாவில் பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவக்கினர். அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின் பேரில், தேசிய அஞ்சல வார விழாவையொட்டி பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சேமிப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புதிதாக சேமிப்பு கணக்கை துவங்கியதோடு, இன்சூரன்ஸ், தங்கமகள் சேமிப்பு திட்டத்திலும் சேர்ந்துள்ளனர். வால்பாறையில் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெற அதிக அளவில் ஆர்வம் காட்டினர். 19 வயது முதல், 65 வயது வரையினான வாடிக்கையாளர்கள் மத்திய அரசு விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இது தவிர, பெண் குழந்தைகளுக்காக தங்கமகள் சேமிப்பு திட்டமும் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகிறது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறும் வகையில், அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் வசிக்கும் மக்கள் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை