பார்வையற்றோருக்கான பாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் அவதி
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பாதையில், வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், மாற்றுத்திறனாளிகள் முட்டி, மோடி அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தகவல்களை பெறவும், உதவிகள், திட்டங்களில் இணையவும் மாற்றுத்திறனாளிகள் பலர், வருகை புரிகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றவர்கள் எளிதாக வந்து செல்ல, பிரத்யேக பாதை அமைக்கப்பட்டது. இப்பாதையில் உள்ள டைல்ஸ், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. அதிலுள்ள கோடுகள், புள்ளிகள், மேடுகள், வளைவுகளை வைத்து, பார்வையற்றவர்கள் விரும்பிய இடத்திற்கு, பிறரின் உதவி இன்றி சென்றுவர முடியும். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முதல், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முதல் அனைத்து துறைகளுக்கும், சென்றுவர இவ்வசதி உள்ளது. ஆனால், தற்போது பார்வையற்றோர் பயன்படுத்தும் பாதைகளில், வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படுவதால், இப்பிரத்யேக பாதை பயன் இல்லாமல் போயுள்ளது. பல்வேறு துறை அலுவலகங்களுக்கு வரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் முட்டி, மோதி, செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியாக செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு, எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க, கோவை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.