உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 9 நாட்களில் யானை தாக்கி இருவர் பலி; கிராம மக்கள் அச்சம்! ஊடுருவலை கட்டுப்படுத்த கோரிக்கை

9 நாட்களில் யானை தாக்கி இருவர் பலி; கிராம மக்கள் அச்சம்! ஊடுருவலை கட்டுப்படுத்த கோரிக்கை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம் வட்டாரத்தில், கடந்த, 9 நாட்களில் காட்டு யானை தாக்கி இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவங்கள் மலையோர கிராம மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து கிராமங்களை நோக்கி வரும் காட்டு யானைகளை, வழியிலேயே தடுத்து நிறுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், வனவிலங்குகளை, குறிப்பாக, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் வனத்துறையின் நடவடிக்கை பின்தங்கியே உள்ளது.

அடுத்தடுத்து உயிரிழப்பு

கடந்த, 15ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்புதூர் கிராமத்தில் வீட்டுக்கு வெளியே நின்று இருந்த, 70 வயது வேலுமணி என்ற விவசாயி யானை தாக்கி, அதே இடத்தில் உயிரிழந்தார்.அடுத்த சில நாட்களில் தெற்கு பாளையம், கென்னடி தென்றல் நகரில் காட்டு யானை ஒன்று வட மாநிலத்தவர் தங்கியிருந்த அறைக்குள் நுழைய முயன்றது. அவர்கள், ரேஷன் அரிசி பையை வெளியே வீசியதால், அதை எடுத்துக் கொண்டு யானை வெளியே சென்று விட்டது. இதனால், அறையில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை துடியலூர் சின்னதடாகம் ரோட்டில் தாளியூரில் வசித்த மளிகை கடை வியாபாரி நடராஜ்,69, காலை, 5:30 மணிக்கு 'வாக்கிங்' சென்றபோது, அப்பகுதி வழியாக வந்த காட்டு யானை, நடராஜை மிதித்து கொன்றது.

கும்கி யானைகள்

கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் அதிகாரிகள், அடுத்தடுத்து உயிர் பலியை ஏற்படுத்திய காட்டு யானையை அடையாளம் கண்டு, அதை ஆனைமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமப்புறங்களில் ஊடுருவுவதை தடுக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், உறுதி அளித்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம், சின்னதடாகம் வட்டாரங்களில் மலையோர கிராமங்களில் கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்த வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உறுதியளித்துள்ளனர்.

'வாக்கிங்' செல்வோருக்கு வனத்துறை எச்சரிக்கை

கோவை வடக்கு மலையோரம் கிராமங்களில் வசிப்போர் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவு வரும் காட்டு யானைகள் காலை, 3:00 மணியிலிருந்து, காலை, 7:00 மணி வரை மலை அடிவாரம் நோக்கி திரும்புகின்றன. அப்போது விவசாயிகள், மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு செல்லவோ, திரும்பி வரவோ கூடாது. குறிப்பாக, ஒற்றையடி பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். வாக்கிங் செல்வோர், யானைகளின் நடமாட்டம் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு, காலை, 7:00 மணிக்கு மேல் வாக்கிங் செல்வது நல்லது. யானை தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக ஈமச்சடங்கு செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், உரிய ஆவணங்கள் அளித்தவுடன் மீதி தொகை வழங்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !