காட்டு யானை தாக்கியதில் இரு தொழிலாளர்கள் காயம்
வால்பாறை : வால்பாறை அருகே, தேயிலை பறித்துக்கொண்டிருந்த போது, யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.வால்பாறை அடுத்துள்ளது மயிலாடும்பாறை எஸ்டேட். தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.வனப்பகுதியை ஒட்டியுள்ள, 46ம் நெம்பர் தேயிலை காட்டில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றைக்கொம்பன் யானையை கண்டதும் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.அப்போது, வேகமாக வந்த கொம்பன் யானை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்கியது. இதில், மயிலாடும்பாறையை சேர்ந்த ராதா,48, வால்பாறை அண்ணாநகரை சேர்ந்த ராஜகுமாரி, 56, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த ராஜகுமாரி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, கேரள மாநிலம் மளுக்கப்பாறை வனத்துறையினர் விசாரித்தனர்.