உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போக முடியல! பயணியர் வேதனை

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போக முடியல! பயணியர் வேதனை

மடத்துக்குளம், ;பயணியரை அச்சுறுத்தும், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தை புதுப்பிக்க, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதை பணிகள் துவங்கும் முன், வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும், மடத்துக்குளத்தில் நிறுத்தப்பட்டது; அதிகளவு பயணியர் பயன்பெற்றனர்.அகல ரயில்பாதை பணிகளின் போது, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அகல ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்கு பிறகு, இந்த ரயில்பாதையில் படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நிற்பதில்லை. இதனால், ஸ்டேஷனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.'டிக்கட் கவுன்டர்' உள்ளடக்கிய ரயில்வே ஸ்டேஷன் கட்டடம் பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேற்புறத்தில் மரங்கள் முளைத்து, சுவர்கள் வலுவிழந்து வருகின்றன.போஸ்டர்கள் ஒட்டி, சுவர் அலங்கோலமாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில், குப்பையை குவித்து வைத்துள்ளனர்; சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பிளாட்பார்ம் அருகிலுள்ள காலியிடத்தை திறந்வெளி கழிப்பிடமாக மாற்றியுள்ளனர்.சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதால், பயணியர் அப்பகுதிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இதர கட்டமைப்புகளும், படிப்படியாக சிதிலமடைந்து வருகிறது.ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தை புதுப்பித்து, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.இல்லாவிட்டால், ரயில்வே ஸ்டேஷன் சமூக விரோதிகள் மையமாக மாறி, அப்பகுதிக்கு யாரும் செல்லாத அவல நிலை ஏற்படும் எனவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ