மேலும் செய்திகள்
ஒன்பது ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
29-Apr-2025
பெ.நா.பாளையம் : கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல் வடிவம் பெறாததால், அதில் பங்கேற்கும் கிராம மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட தேவையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தினை ஊக்குவிக்கவும், திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரிக்கவும் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுப்பதற்கும், செயல்திறன் மிக்க ஒரு சபையே கிராம சபை என, அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பாக, கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கை தலைவரால் வெளியிடப்பட வேண்டும். ஒலிபெருக்கி, துண்டு பிரசுரங்கள் வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கிய இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.கிராமத்தில் மக்கள் தொகை, 500 வரை இருந்தால், 50 பேரும், 51 முதல் 3000 வரை இருந்தால், 100 பேரும், 3000 முதல் 10 ஆயிரம் வரை இருந்தால், 200 பேரும், 10,000க்கு மேல் இருந்தால், 300 பேரும் குறைந்தபட்சம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் பெண்கள் இடம்பெற வேண்டும். கூட்டம் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் கிராமசபை கூட்டத்தில் இல்லை என்றால், கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். மீண்டும் கூட்டம் நடைபெறும் நாள், அறிவிப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், சமீப காலங்களாக கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை வெகு குறைந்துள்ளது. கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், வெறும் சடங்குகளாக மட்டுமே நடக்கின்றன. கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும் பொது மக்களின் எண்ணிக்கை, வெகு குறைவாக உள்ளது. தங்களுடைய குறைகளை கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க, பொதுமக்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்த கிராம சபை கூட்டத்தில் படித்துக் காட்ட வேண்டும்.கூட்டம் முடிந்த, 3 தினங்களுக்குள் கூட்ட குறிப்பினை தீர்மான நகலுடன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். இவையெல்லாம் வெறும் ஆவணங்களாக மட்டுமே உள்ளன. தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளை தவிர, பெரும்பாலான ஊராட்சிகளில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது. குறிப்பாக, அசோகபுரம் ஊராட்சியில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே பங்கேற்றனர்.
29-Apr-2025