மேலும் செய்திகள்
மின் மயானம் மேம்படுத்தப்படுமா?
11-Aug-2025
இந்த வழி வருவதென்றால் மனசில் 'திக்... திக்'
08-Sep-2025
வால்பாறை; மின் மயானம் அமைக்க தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பதால், நகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். வால்பாறை மலைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள மயானத்தில், இடப்பற்றாக்குறையால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர். வால்பாறையில் மின்மயானம் இல்லாததால், இப்பகுதி மக்கள், 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. வால்பாறையில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்று கடந்த, 20 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் கடந்த, 2022ம் ஆண்டு அக். மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட, 50 இடங்களில், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்த பின், மின் மயானம் அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில், வால்பாறையில், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அரசு அறிவிப்பு வெளியிட்டு, மூன்று ஆண்டுகளாகும் நிலையிலும் மின்மயானம் அமைக்க நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கவலையடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் உள்ள மயானத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது. இறந்தவர்களின் உடலை புதைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அரசின் சார்பில் மின்மாயானம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை ரொட்டிக்கடை, பாறைமேடு பகுதியில் நவீன முறையில் மின்மயானம் அமைக்க தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் இடம் கேட்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிர்வாகம் இடம்தர மறுத்து விட்டனர். இதனையடுத்து கருமலை எஸ்டேட் பகுதியில் மின்மாயனம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த எஸ்டேட் நிர்வாகமும் அனுமதி வழங்கவில்லை. இதனால் தான், மின் மயானம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் தகுந்த இடம் தேர்வு செய்து மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
11-Aug-2025
08-Sep-2025