உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகரமைப்பு பிரிவினர் பொறியியல் பிரிவுக்கு இனி, தாவ முடியாது! மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு

நகரமைப்பு பிரிவினர் பொறியியல் பிரிவுக்கு இனி, தாவ முடியாது! மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு

கோவை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் நகர மைப்பு பிரிவுகளில் பணிபுரிவோர் இனி பொறியியல் பிரிவுக்கு தாவ முடியாது; நகரமைப்பு பிரிவில் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும் என, மாநகராட்சி கமிஷனர்களுக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பொறியியல் பிரிவு மற்றும் நகரமைப்பு பிரிவு ஒன்றோடு ஒன்று பிணைந்தது. இவ்விரு பிரிவுகளில் பணிபுரியும் இன்ஜினியர்கள் சீனியாரிட்டியில் குழப்பம் தொடர்கிறது. பதவி உயர்வு பெறுவதற்காக பொறியியல் பிரிவில் இருந்து நகரமைப்பு பிரிவுக்கு தாவுவதும், நகரமைப்பு பிரிவில் இருந்து பொறியியல் பிரிவுக்கு வருவதும் வாடிக்கையாக நடக்கிறது. நகரமைப்பு பிரிவில் உதவி நகர திட்டமிடுநர் பதவி காலியாக இருந்தால், பொறியியல் பிரிவில் உதவி நிர்வாக பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது அல்லது உதவி பொறியாளருக்கு தற்காலிக பொறுப்பு அளிக்கப்படுகிறது.

தாவலால் சர்ச்சை

உதவி நகர திட்டமிடுநர் பதவி என்பது ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளுக்கு பொறுப்பானவர்; உதவி பொறியாளர் என்பவர் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டுமே பொறுப்பானவர். கீழ்நிலை அதிகாரிக்கு காலி பணியிடம் என்பற்காக, உயரிய பொறுப்பை கூடுதலாக வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.அதேபோல், உதவி நிர்வாக பொறியாளருக்கு நகரமைப்பு பிரிவு பணி வழங்கும்போது, பொறியியல் பிரிவில் வளர்ச்சிப் பணிகள் தேங்குகின்றன.இதேபோல், நகரமைப்பு பிரிவில் உதவி நகரமைப்பு திட்டமிடுநராக பணிபுரிவோர், சில சமயங்களில் பொறியியல் பிரிவுக்கு தாவும் பட்சத்தில், உதவி நிர்வாக பொறியாளராக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நிர்வாக பொறியாளர், துணை நகர பொறியாளர், நகர பொறியாளர் போன்ற பதவி உயர்வுகளை பெற முடியும். நகரமைப்பு பிரிவில் பணிபுரிந்தால் நகர திட்டமிடுநர் பதவி உயர்வு மட்டுமே பெற முடியும் என்பதால், பொறியியல் பிரிவுக்கு சிலர் தாவுகின்றனர்.இதற்கு 'செக்' வைக்கும் வகையில், தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இனி வரும் காலங்களில் நகரமைப்பு பிரிவில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். பொறியாளர் என்ற நிலையில், 'பணிகள்' பிரிவுக்கு மாற்றம் செய்ய இயலாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவில் கூறுவது என்ன?

தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் (சென்னை நீங்கலாக) மக்கள் தொகைக்கேற்ப சீரான பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஏற்கனவே உள்ள பணியிடங்கள் முறைப்படுத்தப்பட்டன. நகர திட்டமிடுநர், உதவி நகர திட்டமிடுநர் பணியிடத்துக்கு பதவி உயர்வு வழங்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவில் இருந்த உதவி/ இளம் பொறியாளர்களில், நகரமைப்பு பிரிவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தவர்களிடம் இசைவு கடிதம் பெறப்பட்டது. பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகர திட்டமிடுநர், உதவி நகர திட்டமிடுநர், உதவி பொறியாளர் (திட்டம்), இளம் பொறியாளர் (திட்டம்), நகரமைப்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் நகரமைப்பு பிரிவில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். பொறியாளர் என்ற நிலையில், 'பணிகள்' பிரிவுக்கு மாற்றம் செய்ய இயலாது. இப்பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான கருத்துரு அனுப்பும்போது, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் - 2023ல் கூறியிருப்பதுபோல், நகரமைப்பு பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என, அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை