ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு அகற்ற நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
போத்தனுார்; சுந்தராபுரம் அருகே மாநகராட்சியின், 94வது வார்டு அன்னை இந்திரா நகர் நான்காவது வீதியில், 22 சென்ட் 'ரிசர்வ் சைட்' உள்ளது. இவ்விடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளனர். மீட்கக்கோரி மாநகராட்சியில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். நகரமைப்பு பிரிவினர் அவ்விடத்தை நேற்று அளந்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் குறியீடு மட்டும் போட்டுள்ளனர். அப்போது, 'காமராஜர் நகர் அண்ணாமலை வீடு முதல் மாணிக்கம் வீடு வரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என மக்கள் கூறினர். 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அகற்றப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியினர் கூறுகையில், '25 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு உள்ளது. தற்போதுதான் அளந்துள்ளனர். தாமதிக்காமல் ஆக்கிரமிப்பை அகற்றி, இடத்தை மீட்க வேண்டும்' என்றனர்.